பாடல் எண் :3186

தேவ ரொதுங்கத் திருத்தொண்டர் மிடையுஞ்செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங் கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவலூர ரருள்பெற்று நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து பாடும் விருப்பிற் சென்றணைவார்,
32
(இ-ள்) தேவர்...அருள்பெற்று - தேவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி வழிவிட்டு நிற்கத் திருத் தொண்டர்கள் உட்சென்று நெருங்கி வழிபடும் செல்வநிறைந்த திருவாரூரினைக் காவல் பூண்டு தனியரசாளுகின்ற புற்றிடங் கொண்ட பெருமானது திருவடிகளை வணங்கித் திருநாவலூரராகிய நம்பிகள் அருள்விடை பெற்றுக்கொண்டு; நம்பர்...அணைவார் - சிவபெருமானது பிற பதிகளிலும் சென்று உமைபங்கரைப் பணிந்து பாடும் விருப்பினாலே சென்றணைவாராகி;
(வி-ரை) தேவரொதுங்க...மிடையும் - தேவர்கள் உட்புகும் காலம் பார்த்துத் திருநந்திதேவ ராணையின்படி புறவாயிலிற் காத்திருப்ப, அவர்களை விலக்கித் தொண்டர்கள் எக்காலமும் தடையின்றிப் பணி செய்ய உட்செல்ல உள்ள; இஃது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவாயினும் திருவாரூருக்குரிய சிறப்புத் தன்மை. 137 முதலியவை பார்க்க.
திருவாரூர் காவல்கொண்டு தனியாளும் - "அயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூ ராண்ட" (தேவா).
கடவுட் பெருமான் - தேவதேவர்; புற்றிடங்கொண்டார்; தியாகேசர் என்றலுமாம்.
வணங்கி அருள் பெற்று - பிறபதிகளுக்குச் செல்லும்போது விடைபெற்றுச் செல்லும் மரபு.
நம்பர்...விருப்பில் - கோட்புலியாரது வேண்டுதலுக்கிரங்கி அங்குச் செல்வாரேனும் அங்குமட்டுமன்றி அதனோடு இடையிற் காணும் பிறபதிகளிலும் வணங்கிச் செல்லும் மரபும் விருப்பமும் குறித்தது; சிவன் கோயில் வழிபாட்டின் ஆர்வமிகுதல் பக்குவமுடைய உயிர்களின்மாட்டு நிகழ்வது.
அணைவார் வணங்கி நண்ண - என மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.