பாடல் எண் :3187

மாலு மயனு முணர்வரியார் மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தந் நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையா லலங்கரித்தங் கவருமெதிர் கொண்டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்க ணார்வம் பெருகக் கொடுபுக்கார்.
33
(இ-ள்) மாலும்...வணங்கி - விட்டுணுமூர்த்தியும் பிரமதேவனும் அறிதற்கரிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று; ஞாலம்...நண்ண - உலகிற் பரவிய புகழுடைய கோட்புலியாரது திருநாட்டியத்தான்குடியினைச் சென்று சேர; ஏலும்...கொடுபுக்கார் - பொருந்தும் வகையினால் பதியினை அலங்காரம் செய்து அவரும் வரவு எதிர்கொண்டு மகிழ்ச்சியோடும் வந்து பணிந்து, அழகிய மணிகளையுடைய தமது திருமாளிகையினிடத்து ஆசை மீக்கூரக் (நம்பிகளை உடன்) கொண்டு உட்புகுந்தனர்.
(வி-ரை) பதிகள் பல - இவை திருவாரூரினின்றும் திருநாட்டியத்தான்குடிக்குச் செல்லும் வழியில் இடையிலும் அருகிலும் உள்ளன. இவை திருவிளமர், திருஏமப்பேறூர், மாவூர் முதலாயின என்பது கருதப்படும்.
ஞாலம் நிகழ் - உலகில் புகழ் பரவி நிகழும்; ஞால நிகழ் நாட்டியத்தான்குடி என்று கூட்டி உரைக்கவும் நின்றது.
ஏலும் வகையால் - நம்பியாரூரரது நல்வரவின் சிறப்பினுக்குத் தகுதியாகப் பொருந்தும் அளவினாலே; தமது என்றலுமாம்.
அவரும் - அந்தக் கோட்புலியாரும் என முன்னறி சுட்டு.