பாடல் எண் :3188

தூய மணிப்பொற் றவிசிலெழுந் தருளி யிருக்கத் தூநீராற்
சேயமலர்ச்சேவடிவிளக்கித்தெளித்துக்கொண்டச்செழும்புனலான்
மேய சுடர்மா ளிகையெங்கும் விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பி லர்ச்சனைக ளெல்லா மியல்பின் முறைபுரிவார்,
34
(இ-ள்) தூய...இருக்க - தூய்மையாகிய மணிகளிழைத்த பொற்பீடத்திலே (நம்பிகள்) எழுந்தருளியிருக்க; தூநீரால்....விளக்கி - தூய்மையாகிய நீரினாலே அவரது செம்மை தரும் மலர் போன்ற திருவடிகளை விளக்கி; தெளித்துக்கொண்டு - அந்நீரினைத் தம்மேல் தெளித்துக் கொண்டு; அச்செழும் புனலால்....வீசி - அந்தச் செழிய நீரினாலே பொருந்திய ஒளியினையுடைய திருமாளிகை முழுதும் விளங்கும்படி வீசி; உள்ளம் களிப்ப...புரிவார் - மனமகிழப் பொருந்திய சிறப்பினையுடைய வழிபாட்டு முறைகளெல்லாவற்றையும் இயல்பினால் விதி முறைப்படி செய்வரராகி,
(வி-ரை) எழுந்தருளியிருக்க - நம்பியாரூரர் என்ற எழுவாய் வருவிக்க.
(நம்பி) எழுந்தருளியிருக்க - (கோட்புலியார் அவரது) சேவடி விளக்கித் - தெளித்துக்கொண்டு - வீசி - புரிவார் - ஏந்தி (3189) - எடுத்துத் - தாங்கி - நிரைத்தே - இறைஞ்சி - அளித்தார் (3190) என இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. கோட்புலியார் என்ற எழுவாய் தொக்கு நின்றது.
தெளித்துக் கொண்டு - தம் மேனிமேல் தெளித்துக் கொள்ளுதல் அதனுட் குளித்துத் தூய்மை பெறும் நிலை.
செழும் புனல் - செழுமை - நம்பிகளின் திருவடிச் சம்பந்தத்தாற்போந்தது.
மாளிகை எங்கும் புனல் வீசுதல் - மாளிகையினைப் புனிதமாக்கும் பொருட்டு.
சிறப்பிற் - புரிவார் - என்க. அர்ச்சனைகள் - இங்கு வழிபாட்டு முறைகளைக் குறித்து நின்றன. அவை மேற்கூறப்பட்டுள்ளன.
இயல்பின் முறை - இயல்பாவது வலிந்து மேற்கோடலின்றி உள்ளூர எழும் அன்பினால் தன் இயல்பாக வருவது; முறை - நூல் விதி முறை.
புரிவார் - புரிவாராகி; முற்றெச்சம்.