பாடல் எண் :3189

பூந்தண் பனிநீர் கொடுசமைத்த பொருவில் விரைச்சந்தனக்கலவை
வாய்ந்த வகிலி னறுஞ்சாந்து வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியினறுநெய் தூய பசுங்கர்ப் பூரமுடன்
ஏய்ந்த வடைக்கா யமுதினைய வெண்ணின்மணிப்பா சனத்தேந்தி,
35
(இ-ள்) வெளிப்படை. அழகிய குளிர்ச்சியுடைய பனிநீர் கொண்டு அரைத்த ஒப்பற்ற சந்தனக் கலவையும், பொருந்திய அகிற் கட்டையின் மணமுடைய சாந்தும், மணங் கமழும் கத்தூரிக் குழம்பும்; புகைதோய்ந்த மணமுடைய நாவிநெய்யும், தூயவாகிய பச்சைக்கற்பூரமும் ஆகிய இம்மெய்ப் பூச்சுக்களுடனே பொருந்தவரும் அடைக்காயமுதும் இவ்வாறாகிய பண்டங்களைத் தனித் தனி அளவில்லாத அழகிய தட்டுக்களில் எடுத்தேந்தியும்,
(வி-ரை) பூந்தண் பனிநீர் - பூ - பூவினின்றும் எடுக்கப்படும்; தண்மை குளிர்ந்த; பரிசம். குணமுமாக. சமைத்தல் - பனிநீர் கூட்டி அமைத்தல்.
மான்மதம் - கத்தூரி. தோய்ந்த புகை - புகை தோய்ந்தாற் போலும்; புகைத் தெடுக்கும் வாசனைக் கூட்டுப் பண்டமுமுண்டு. நாவி - புனுகு.
பசுங்கர்ப்பூரமுடன் - உடன் என்ற உருபு தந்து, இதுவரை கூறிவந்த வாசனைப் பண்டங்களின் வகைகளை வேறு பிரித்தார்.
அடைக்காயமுது - தாம்பூலம்; அடைக்காயமுது என்பது பழங்காலக் கல்வெட்டுக்களிற் காணும் சொற்றொடர்.
எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி - பாசனம் - தட்டு - பாத்திரம்; எண்ணில் என்றார் வகைகள் பலவாதலின் தனித்தனி ஏந்துதற் பொருட்டு; ஏந்துதல் - எடுத்தல்.
சந்தனமெனவே - கர்ப்பூர முதல் - என்பனவும் பாடங்கள்.