பாடல் எண் :3191

செங்கோ லரச னருளுரிமைச் சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினாற்
றங்கோ மனையிற் றிருவமுது செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற்பெருங்காதல்புரிந்தார்; பின்னும்போற்றுவார்,
37
(இ-ள்) செங்கோலரசன்....கோட்புலியார் - செங்கோன்மையுடைய சோழ அரசனது அருள் உரிமையுடைய சேனாதிபதியாகிய கோட்புலியார்; நங்கோமானை...இறைஞ்சி - நமது பரமாசாரியராகிய தலைவரைத் திருநாவலூரின் மன்னவரை நட்புரிமையினாலே தமது அரண்மனையில் திருவமுது செய்வித்து வணங்கி; தலைசிறந்த...போற்றுவார் - பெருகும் கடல் போன்ற மிகச் சிறந்த பெருவிருப்புடையராகி மேலும் துதிப்பாராகி;
(வி-ரை) செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதியாம் கோட்புலியார் - "ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்" (3159) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
செங்கோல் அரசன்- சோழன்; அரசன் பெருமை கூறியபடி; அருள்உரிமைச் சேனாபதி - அருள் - அரசனது அருளுக்குத் தகுதியுடையராய்; உரிமை - வழி வழி மரபின் வரும் உரிமை பெற்ற சேனாபதித் தன்மை.
உரிமைச் சேனாபதியாம் - இக்குடியினின்றே சேனாபதிகளை அரசர் தேர்ந்தெடுக்கும் உரிமை குறித்தது; ஏனாதிநாதர் மன்னர்க்கு வாட்படை பயிற்றும் தொல்குடித் தாயத்தின் வந்தார் என்ற வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது;
அருளுரிமை - மன்னன் அருள்பெறும் உரிமை. By Appointment என்னும் நவீனர் வழக்கம் காண்க. இவ்வுரிமைக்கு விளைநிலம் - பட்டம் முதலிய பகுதிகளும் முன்னாளில் அரசர் வழங்கும் மரபும் உண்டு.
நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை - நம் கோமான் - நமக்குரிமையாகிய சைவ சமய பரமாசாரியர் என்பது குறிப்பு; கோமான் - தலைவர். வேந்து - அதிபதி; ஈண்டு இவ்வாற்றாற் குறித்தது அரசரருளுரிமைச் சேனாபதியாங் கோட்புலியாரால் வழிபடற்குரிய அரசராகிய ஏற்றமுடைமை குறித்தற்கு; அன்றியும் அமைச்சர் - அரசர் சேனாபதி முதலியோர் மகளிரை அரசர் மணக்கும் வழக்குண்மையின், ஈண்டுக் கோட்புலியார் தமது மக்களிருவரையும் அடிமைகொள்ளும்படி நம்பிகளை வேண்டிநிற்கும் தன்மையினை அமைதிப்படுத்தற் குறிப்புமாம்; நங் கோமான் நாவலூரார் வேந்து என இரண்டு தன்மையாற் கூறியது அன்பர் பெருமானாந் தன்மையும் அதனுடன் அரசர்பெருமானந் தன்மையும் குறிப்பது. "பெருமைசா லரசர் காதற் பிள்ளையாய்" (152) நம்பிகள் வளர்ந்த தன்மையும் குறிப்பு.
கோமனை - அரசர்களது அரண்மனைக்கேற்ற சிறப்புச் சேனாபதியார் மனைகளுக்கும் உண்டு என்பது குறிப்பு. சேனாபதிகளை "மேன்மை தங்கிய" (His Excellency) என்ற கண்ணியப் பட்டத்துடன் அழைக்கும் இந்நாள் மரபும் காண்க.
தலைசிறந்த - பெருங் காதல் என்று கூட்டுக. பொங்கு ஓதம் - பொங்கும் கடல்; ஓதம் பொங்குதல் போல மேன்மேற் பெருகும் காதல் என்க.
தலைசிறந்த பொங்கு ஓதம் என்றே கூட்டித் தலை உவாநாளில் பொங்கும் கடல்போல் என்றலுமாம்.
காதல் புரிதலாவது - காதலால் வரும் செயல் எல்லாம் செய்தல்.
போற்றுவார் - போற்றுவாராய்; முற்றெச்சம்.
போற்றுவார் - கொணர்ந்து - பணிவித்துத் - தொழுது - சொல்லுவாராய் - (3192) - என (3193) என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க.