பாடல் எண் :3192

ஆனா விருப்பின் மற்றவர்தா மருமை யான்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார் தமையு மவர்பின் றிருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார் தமையுங் கொணர்ந்துவன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமுந் தொழுதுசொல்லுவார்.
38
(இ-ள்) ஆனா விருப்பின் மற்றவர் - குறையாத அப்பெரு விருப்பினாலே அக்கோட்புலியார்; தாம்...கொணர்ந்து - தாம் அருமையாக முன்னே பெற்றெடுத்த தேன் பொருந்திய மாலையணிந்த சிங்கடியார் என்னும் மகளாரையும் அவர் பின்னே, திருமகள்போற் பெற்ற மான்போலும் மருண்ட பார்வையுடைய வனப்பகையார் என்னும் அம்மையாரையும் அழைத்துக்கொண்டு முன் வந்து; வன்றொண்டர்...பணிவித்து - வன்றொண்டராகிய நம்பிகளது தூய புதிதான தாமரை போன்ற பாதங்களில் வணங்கும்படி செய்து; தாமும் தொழுது சொல்லுவார் - தாமும் வணங்கிச் சொல்வாராகி,
(வி-ரை) ஆனாவிருப்பு - குறையாத விருப்பம்.
திருவுயிர்த்த - பெற்ற - ஈன்ற; உயிர்த்தல் - மகவு பெறுதல் - பிறப்பித்தல்.
சிங்கடி - வனப்பகை - கோட்புலியாரது இரண்டு பெண்மக்கள். அந்நாளில் பெண்மக்களுக்குப் பெயரிடும் மரபு காண்க. இவ்வாறு வரும் பல பெயர்கள் பழங்காலக் கல்வெட்டுக்களாலு மறியப்படுவன.
தேனார் கோதைச் சிங்கடி - "சேடார் பூங்குழற் சிங்கடி" (நாட்டியத்தான் குடி - 10 - நம்பி தேவா) என்ற பதிகக் கருத்துப் போற்றப்பட்டது.
தேனார் கோதை - மானார் நோக்கின் - ஒருவரை அணிநலத்தாலும், மற்றவரை உடலியல் நலத்தாலும் உரைத்தமை காண்க. இரண்டும் இருவர்பாலும் கூட்டியுரைக்க வைத்த குறிப்பு; 3193 பார்க்க.
கொணர்ந்து - பெண்ணியல்பாகிய நாண் முதலிய குணங்களாலே அவர் தாமே நம்பிகளெதிர் வரமாட்டாராதலின் அழைத்துக் கொண்டு வந்தார் என்க.
பணிவித்து - மணமாகும் வரை பெற்றோர் சொற்படி அமைவது பெண்ணியல்பாதலின் பணிவித்து என்றார்.