பாடல் எண் :3194

கோதை சூழ்ந்த சூழலாரைக் குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காத னிறைந்த புதல்வியராங் கருத்துட் கசிவா லணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து வேண்ட வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார் நம்பி தம்பி ரான்றோழர்.
40
இ-ள்) கோதை...வைத்துக்கொண்டிருந்து - மாலையணிந்த கூந்தலையுடைய அப்பெண்களை மடியில் வைத்துக் கொண்டிருந்து; காதல்...மோந்து - மிக்க அன்பு நிறைந்த புதல்வியர்களாகும் கருத்தினாலே உள்ளங் கசிய அணைத்து உச்சிமேல் தமது கண்ணீர் விழும்படி உச்சிமோந்து; வேண்டுவனவும் கொடுத்தருளி - அவர்க்குத் தாம் வேண்டுவனவற்றையுங் கொடுத்தருளி; நாதர்...தோழர் - நம்பியாரூரராகிய தம்பிரான்றோழர் இறைவரது திருக்கோயிலினைச் சென்றடைந்தருளினர்.
(வி-ரை) கோதை சூழ்ந்த குழலார் - "தேனார் கோதைச் சிங்கடி" (3192) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
குறங்கு - துடை. துடையின்மேல் வைத்தல் மக்களைப் பாராட்டும் வகை. பின்னர் வரும், அணைத்தல் - உச்சிமேற் கண்ணீர் விழ மோத்தல் முதலியனவும் இவ்வாறே.
உச்சிமீது கண்ணீர் விழமோந்து - உட்கசிவினால் போந்த அன்புக் கண்ணீர் உச்சி மோந்தபோது அவர்களது உச்சிமேல் விழும் என்க.
வேண்டுவன - அவர்க்கென்று தாம் விரும்பியனவாகிய பொருள்களும் ஆசியும்.
தம்பிரான்றோழர் - பரவையார்தங் கொழுநனார் என்ற முன் பாட்டின் கருத்தைத் தொடர்ந்த வரலாற்றுக் குறிப்புப்படக் கூறியபடி.