வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர் திருக்கோ புரமிறைஞ்சி ஒன்று முள்ளத் தொடுமன்பா லுச்சி குவித்த கரத்தோடுஞ் சென்று புக்குப் பணிந்துதிருப் பதிகம்"பூணா" ணென்றெடுத்துக் கொன்றை முடியா ரருளுரிமை சிறப்பித் தார்கோட் புலியாரை. | 41 | (இ-ள்) வென்றி...இறைஞ்சி - வெற்றி பொருந்திய வெள்ளை எருதினைக் கொடிமேல் உயர்த்தியருளும் விமலராகிய சிவபெருமானது கோயிலின் திருக்கோபுரத்தினை வணங்கி; ஒன்றும்....பணிந்து - ஒன்றிய உள்ளத்தினோடும் அன்பினாலே உச்சிமேற் கூப்பிய கைகளுடனே திருக்கோயிலினுள்ளே சென்று புகுந்து பணிந்து; பதிகம் "பூணாண்" என்றெடுத்து - திருப்பதிகத்தினைப் "பூணாண்" என்று தொடங்கி; கொன்றை...கோட்புலியாரை - கொன்றை சூடிய சிவபெருமானது அருளின் உரிமை பற்றி அப்பதிகத்தினுள்ளே கோட்புலியாரைச் சிறப்பித்துப் பாடியருளினார். (வி-ரை) ஒன்றும் உள்ளம் - இரண்டற ஒன்றாகப் பொருந்திய உள்ளம்; இறைவரையன்றி வேறொன்றும் நினையாத நிலை ஒன்றும் - எனப்பட்டது. பூணாண் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. அருளுரிமை - அருள் உரிமை காரணமாக; இறைவரது திருப்பதிகத்தினுள் கோட்புலியாரது பெருமையினைக் கூறவந்த காரணம், அவர், இறைவரது அருளுக்கு உரியராந் தன்மையே என்பது. திருச்சாத்தமங்கைத் திருப்பதிகத்தில் திருநீலநக்கரையும், திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகத்தினுள் சிறுத்தொண்ட நாயனாரையும் ஆளுடைய பிள்ளையார் சிறப்பித்ததும், திருப்பழனத் திருப்பதிகத்துள் அப்பூதியாரை அரசுகள் சிறப்பித்ததும், மற்றும் இவ்வாறு வருவனவும் கண்டு நினைவுகூர்தற்பாலன. ஆளுடைய நம்பிகள் வரலாற்றினுள் இது சரித அகச் சான்றாக வரும் சிறந்த இடமாதலின் ஈண்டுக் காரணங் கூறினார். கோட்புலியாரைச் சிறப்பித்தார் - என்க. வினைமுற்று, முன் வந்தது ஆர்வம் மிகுதி பற்றிய விரைவு குறித்தது. சிறப்பித்தமை அவர் வழிபடும் ஊர் என்று பதியினைக் கூறியதனால் அறிக. பதிகம் 10-வது பாட்டிற் "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி" என்றது காண்க. பதிகப்பாட்டுக் குறிப்புப் பார்க்க. |
|
|