சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப் பதனி னிடைச்சிங் கடியாரைப் பிறப்பித் தெடுத்த பிதாவாகத் தம்மை நினைந்த பெற்றியினான் மறப்பில் வகைச்"சிங் கடியப்ப" னென்றே தம்மை வைத்தருளி நிறப்பொற்புடைய விசைபாடி நிறைந்த வருள்பெற்றிறைஞ்சுவார், | 42 | (இ-ள்) சிறப்பித்தருளும் திருக்கடைக்காப் பதனினிடை அவ்வாறு கோட்புலியாரைச் சிறப்பித்தருளும் பதிகக் திருக்கடைக்காப்பினிலே; சிங்கடியாரை....பெற்றியினால் - சிங்கடியாரைப் பெற்றெடுத்த பிதாவாகவே தம்மை உட்கொண்டு துணிந்த தன்மையினாலே; மறப்பில் வகை - அத்துணிபு மறவாது நிலைத்திருக்கும்படி; சிங்கடியப்பன்...வைத்தருளி; சிங்கடியப்பன் என்ற தன்மையாலே தம் பெயரைப் பொறித்து வைத்தருளி; நிறப்பொற்புடைய...இறைஞ்சுவார் - நிறம் என்னும் இசைப் பண்பின் அழகு பொருந்தப் பண் இசையினைப் பாடி நிரம்பிய அருளினைப் பெற்று வணங்குவாராகி, (வி-ரை) சிறப்பித்தருளும் திருக்கடைக் காப்பு - முன் பாட்டிற் "சிறப்பித்தார்" (3195) என்றது பதிகத்துள் இன்ன திருப்பாட்டு என்று காட்டியருளியவாறு. பிதாவாக - நினைந்த பெற்றி - மக்கள் "எனக்கொண்டு" (3193) என்று முன்கூறியபடி துணிந்த தன்மை; நினைதல் - துணிதல்; பெற்றி - தன்மை. பெற்றியினால் தம்மை வைத்து - என்று கூட்டுக. வைத்தற்குக் காரணங் கூறியபடி; சிங்கடி யப்பன் என்ற தேவாரத்தின் கருத்தினையும் பொருளையும் விளக்கிக் காட்டியவாறுமாம். தம்மை வைத்தலாவது - தம் பெயரை அவ்வாற்றாற் கூறிப் புலப்படப் பொறித்தல் (முத்திரீ கரித்தல்); என்றே - ஏகாரம் சிறப்பு. நிறப் பொற்புடைய இசை - நிறம் - இசைப்பாடுகள். "நிறம்பயி லிசையுடன்" (2139) "தாளநிலையில் எய்தவைத்த நிறம்" (சிலப். அரங். 26-36 உரை.) இப்பதிகம் தாள நிறைவின் அமைதிபெற வருதல் காண்க. இறைஞ்சுவார் - இறைஞ்சுவாராகி; இறைஞ்சுவார் - எழுந்தருளி என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. பிறப்பித்தெடுத்த பிதாவாக - ஈன்று வளர்த்த தந்தையாராகவே; அவ்வாற்றால்வரும் பிதாவல்லாதிருந்தும் அவ்வாறு ஆகத் தம்மை ஆக்கிக் கொண்டு என ஆக்கச் சொல்லின் பொருள் விரித்துக்கொள்க. "அன்பினான் மகன்மை", பாலூட்டலான் மகன்மை, எடுத்தலால் (சுவீகாரம்) மகன்மை என்று பலவாறு வரும் மகன்மை - தந்தை - முறைகள் போலக் கொள்க. ஈண்டுப் பிறப்பித்தெடுத்த பிதாவாகத் தம்மை எண்ணித் துணிந்து கொண்ட முறையால் அப்பன் என்றார் என்பது. |
|
|