பாடல் எண் :3197

அங்கு நின்று மெழுந்தருளி யளவி லன்பி னுண்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டே"னென்
றெங்குநிகழ்ந்த தமிழ்மாலை யெடுத்துத்தொடுத்த விசைபுனைவார்,
43
(இ-ள்) அங்குநின்றும்....உண்மகிழ - அப்பதியினின்றும் எழுந்தருளிச் சென்று அளவில்லாத அன்பினாலே மனமகிழ்ச்சி பெற்று; செங்கண்...இறைஞ்சி - சிவந்த நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவலிவலத்தினைச் சென்று சேர்ந்து வணங்கி; மங்கை....என்று - உமையம்மையாரை ஒருபாகத்தில் உடைய இறைவரைப் பாடும் பதிகம் "வலிவலத்துக் கண்டேன்" என்ற முடிபினுடன்; எங்கும்....இசை புனைவார் - எங்கும் விளங்கிய தமிழ் மாலையினைத் தொடங்கித் தொடுத்த இசையினைச் சூட்டுவாராகி,
(வி-ரை) திருவலிவலம் - திருநாட்டியத்தான்குடியினின்றும் திருவாரூருக்குச் செல்லும் வழி இடையில் உள்ளது.
"வலிவலத்துக் கண்டேன்"ன்று - இது பதிகத்தின் மகுடக் குறிப்பினாலே பதிகக் கருத்துக் கூறியபடி. "வலிவலந்தனில் வந்து கண்டேனே" என்பது பதிகம்.
எங்கும் நிகழ் திருத்தமிழ்மாலை - எல்லாவிடத்தும் பெருமை விளங்கப் பரவிய செந்தமிழ்த் திருப்பதிகம். "ஒலிகொளின்னிசைச் செந்தமிழ் பத்தும் என்பது பதிகத் திருக்கடைக் காப்பு. எங்கும் நிகழ்ந்து - "ஒலிகொள் இன்னிசை" (பதிகம்) என்றபடி ஒலிவடிவாயினமையால் அவ்வொலி அலைகள் பரம்பரையில் எங்கும் சென்று பரவி நிகழ உள்ள தன்மையும் குறிப்பு. இந்நாள் (Radio) ஒலிபரப்பியின் தத்துவம் காண்க. புகழ் பரவுதலுமாம்.
எடுத்து - தொடங்கி; தொடுத்த - மாலை என்றதற்கேற்பத் தொடுத்த என்றார். தொடை - என்ற யாப்பினுறுப்பு வழக்கும் காண்க; இசை - இசையினையுடைய பாட்டுக்கு வந்தது. "இன்னிசைச் செந்தமிழ்" என்ற பதிகமும் காண்க.
புனைவார் - என்று சிறப்பித்து என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. புனைவார் - புனைவாராகி; முற்றெச்சம்.
மருவு திருவலிவலம் - என்பதும் பாடம்.