பாடல் எண் :3198

"நன்று மகிழுஞ் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டுகந்தீர்"
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந் தேத்தியருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற் பெருமான் செம்பொற் கழல்பணிந்து,
44
(இ-ள்) நன்று....எழுந்தருளி - "நன்மை விளங்கி மகிழும் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்றிருவருடைய திருப்பாட்டுக்களைக் கேட்டு மகிழ்ந்தருளினீர்" என்று சிறப்பித்து வணங்கி மகிழ்ந்து துதித்துத் திருவருள் பெற்று மேலே எழுந்தருளிச் சென்று; மன்றினிடையே...பணிந்து - திருவம்பலத்தினிடமாகக் கூத்தியற்றும் பெருமான் எழுந்தருளிய பெருமையுடைய திருவாரூரினிற் சென்று சேர்ந்து பூங்கோயிலினுள் எழுந்தருளிய புற்றிடங்கொண்ட பெருமானது செம்பொன் போன்ற திருவடிகளைப் பணிந்து,
(வி-ரை) நன்று....என்று - இது பதிகத்தினுள் "நல்லிசை ஞானசம்பந்தனு நாவுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை, சொல்லிய வேசொல்லி யேத்துகப் பானை" என்ற ஐந்தாம் பாட்டினைக் குறிப்பது. நன்று மகிழும் - பாட்டு என்று கூட்டுக. நல்லிசை என்றது பதிகம்; திருஞானசம்பந்த நாயனார் - திருநாவுக்கரசு நாயனார் என்ற இரு பெருமக்களுடைய திருப்பாட்டுக்களில் இறைவர் மிக்க விருப்புடன் மகிழ்வர் என்பதாம். இவ்வுண்மை அவர்தம் புராணங்களுட் பல்லாற்றானும் இனிது விளங்குதல் கண்டுகொள்க. இதனை நம்பிகள் எடுத்துக்காட்டிப் பாராட்டுதல் பெருஞ் சிறப்பு; இவ்வுண்மைச் சிறப்பு நம்பிகளது திருப்பாட்டுக்களுக்கு மொக்கும்.
மன்றி னிடையே நடம்புரிவார் - அம்பலக் கூத்தர்; தியாகராசரும் நடராசரும் ஒருவரே என்பது முன்னர் "ஆரூரில் வருக நம்பால்"(254) என்றவிடத்துரைத்தவாற்றானும், அவ்வாறு வந்த நம்பிகளுக்கு ஆரூரர் பெருமான் "தில்லைவாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்" என்று முதலெடுத்துக் கொடுத்தமையானும், அவ்வாறு தில்லையினைப் பற்றித் திருவாரூரிற் றொடங்கிய முதனூல் திருவாக்குத், தில்லையில் இறைவர் "உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுக்க அங்கு நிறைவெய்தியவாற்றானும், பிறவாற்றானும் அறியப்படும். இவ்வுண்மை பற்றியே நடராசப் பெருமான் பிற்காலத்தில் ஒருகால் திருவாரூரில் எழுந்தருளியிருந்தார் போலும்; மருவு - என்ற எதிர்காலக் குறிப்பும் காண்க.
பூங்கோயிற் பெருமான் செம்பொற் கழல் பணிந்து - நம்பிகள் திருவாரூர் சென்றவுடன் பரவையார் திருமாளிகைக்கு நேரே செல்லாது பூங்கோயிலுக்குச்சென்று உடைய பெருமானை வணங்கிய பின்னர்ச் செல்வது காண்க. இதுபற்றி முன் உரைத்தவையும் நினைவுகூர்க.
பூங்கோயில் - திருவாரூர்க் கோயிலின் பெயர்; முன் உரைத்தவை (135) பார்க்க.