பாடல் எண் :3199

இறைஞ்சிப் போந்து பரவையார் திருமா ளிகையி லெழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநா ணீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா தோவா வின்ப முற்றிருந்தார்.
45
(இ-ள்) இறைஞ்சி...மேவுநாள் - வணங்கிச் சென்று பரவையாருடைய திருமாளிகையில் எழுந்தருளி நிறைந்த விருப்பினுடனே பொருந்தியிருக்கும் நாட்களிலே; நீடு...போற்றி - நீடிய செல்வத் திருவாரூரின் புறம்பிலே அணுகஉள்ள திருக்கோயில்களையும் சென்று பணிந்து துதித்து; புற்றிடமாய்...உற்றிருந்தார் - புற்றிடங் கொண்டு நீங்காதெழுந்தருளிய பெருமானது திருவடிகளைப் பிரியாது இடையறாத இன்பம் பெற்று வீற்றிருந்தருளினார்.
(வி-ரை) பரவையார் திருமாளிகையில் - இறைவரால் ஆளாகக் கொள்ளப்பெற்றுத் தவநெறியும் பெற்றமையால், நம்பிகள் தமக்கென ஓரூரும் இடமும் இல்லாது இறைவரது இடங்களே தமதிடமாக்கொண் டொழுகினர்; ஆதலின் திருவாரூரில் பரவையார் திருமாளிகையையும் திருக்கோயிலினையுமே தமதிடமாக் கொண்டனர் என்பது குறிப்பு; இவ்வாறு முன்னுரைத்தவையும் பின்வருபவையும் பார்க்க.
நணிய கோயில்கள் - திருவாரூரினை அடுத்து அணிமையில் உள்ள பல கோயில்கள். இவை திருவிளமர், திருமாலுமங்கை, திருச்சாத்தமங்கை, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும்.
பிரியாதே - புறம்பு நணிய கோயில்களுக்குச் சென்று தொழுது அவ்வந்நாளே திருவாரூருக்குத் திரும்பிவந்து சார்ந்தார் என்பது.
ஓவா இன்பம் - நீங்காத இன்பம். வெளியே கோயில்களைச் சென்று வணங்கினாலும் அவ்வந்நாளே திருவாரூருக்குத் திரும்பிவந்து புற்றிடங்கொண்டாரை ஒரு நாளும் இடைவிடாது வணங்கியபடியால் இடையறா இன்பம். ஓவுதல் - நீங்குதல்.
புறம்பு நணிய - புறம்பாயினும் அணிமையில் உள்ள.