சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி முன்றில் பணிந்துவலங்கொண்டு முதல்வர் முன்புவீழ்ந்திறைஞ்சித் தொன்று மரபி னடித்தொண்டு தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து நின்று பதிக விசைபாடி நிகழ்ந்த கருத்து நிகழ்விப்பார். | 47 | (இ-ள்) வெளிப்படை. சென்று விரும்பித் திருப்புகலூரிலே தேவதேவராகிய இறைவரது திருக்கோயிலில் மணிமுற்றத்தில் வணங்கி வலமாகவந்து முதல்வரது திருமுன்பு நிலமுறவிழுந்து வணங்கிப் பழைய மரபின் வரும் திருவடித் தொண்டிலே ஊறிய அன்பினாலே துதித்து எழுந்து நின்று திருப்பதிக இசையினைப் பாடித் தாம் எண்ணி வந்த கருத்தினை விண்ணப்பிப்பாராகி; (வி-ரை) சென்று...நிகழ்விப்பார் - நினைந்தபின் திருப்புகலூர் சேர்ந்தருளியதும், சேர்ந்தபின் வழிபட்டுப் பாடி நின்றதும் இவ்வாறு ஒரு பாட்டிற் சுருங்கக் கூறியருளியது செயலின் விரைவு குறித்தற்கு. தொன்றுமரபின் அடித்தொண்டு தோய்ந்த - பழமையாக வரும் திருவடி வழிபாட்டு முறையில் உள்ளூறிய; மரபு - நெறி; குருமரபின் வந்த சிவ தவநெறி; இவ்வாறன்றி மரபு வழிவழி வந்த குலம் என்பாருமுண்டு; தான்று - தொன்று தொட்டு வந்த. நிகழ்வித்தல் - விண்ணப்பித்தல்; நிகழ்விப்பார் - முற்றெச்சம்; நிகழ்விப்பார் - கும்பிட்டு என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. நினைந்த - முன்பாட்டில் நினைந்து என்ற எண்ணம். பதிகவிசை பாடி - இப்பதிகம் கிடைத்திலது! |
|
|