சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்ன மங்கொழிய வறிது புறம்போந் தருளியயன் மடத்தி லணையார் வன்றொண்டர் அறிவு கூர்ந்த வன்பருட னணிமுன் றினிலோ ரருகிருப்ப மறிவண் கையா ரருளாலோ மலர்க்கண் டுயில்வந் தெய்தியதால். | 48 | (இ-ள்) சிறிது...ஒழிய - சிறிது நேரம் கும்பிட்டு நின்று பின்னர் மனம் அங்கு நிற்க; வறிது...அணையார் - (நினைந்த பொன் பெறாது) வறிதே புறத்துப் போந்து பக்கத்தில் எந்தத் திருமடத்திலும் சென்று அணையாமல்; வன்றொண்டர்...அருகிருப்ப - வன்றொண்டராகிய நம்பியாரூரர் அறிவு பெருகிய அன்பர்களுடனே அழகிய திருமுற்றத்தில் ஒரு பக்கமாக எழுந்தருளியிருப்ப; மறி...எய்தியதால் - மானேந்திய வண்மையினையுடைய இறைவரது திருவருளாலேயோ (அறியோம்) அவரது மலர்போன்ற திருக்கண்கள் துயில்வந்து பொருந்தப் பெற்றன. (வி-ரை) சிந்தை முன்னம் அங்கு ஒழியப் புறம்போந்து - மனம் அங்குத் தங்கி நிற்கத் திருமேனி மட்டில் புறமுற்றத்திற் போந்து. அயல்மடத்தில் அணையார் முன்றிலின் அருகிருப்ப என்க. வழிபாட்டு நேரங்களிலன்றி மற்றை நேரங்களில் திருக்கோயிலினும் திருமுற்றத்திலும் தங்குதல் பெரியோர் மரபன்று; விதியுமன்று. என்னை? அவ்வாறு தங்கின் உடம்பின் உபாதிவசத்தாலும் மற்றும் பலப் பல அபசாரங்களுக்கு இடமாகுமாதலானென்க; அருகு - ஒருபுடை - பக்கம். அருளாலோ - திருவருளாலேயோ? யாம் அறியோம் என்றபடி. திருமுற்றத்தில் துயிலலாகாது என்பது விதியாதலின் அதற்கு மாறாக; வழிபாட்டுமுறையும் விதியுமறிந்து ஒழுக்கத்தினும் சிறந்த நம்பிகளுக்குத் துயில் வந்தது. அவரும் துயில் கொண்டனர் எனின், அஃது இறைவர் திருவருளினாலன்றி நேராது என்பார் அருளாலோ என்ற உடன்பாட்டு வினாவினாற் கூறினார்; "தம் மேலைச் சார்புணர்ந்தோ?" (1961) "தம்பெருமா னருளாலேயோ" (1891) என்பன முதலியவை பார்க்க. அருளாலே என்ற பாடமுமுண்டு. அறிவு கூர்ந்த - நம்பிகளுடனிருக்கும்பேறு வாய்த்தவர்களின் பண்பு. |
|
|