சுற்று மிருந்த தொண்டர்களுந் துயிலு மளவிற் றுணைமலர்க்கண் பற்றுந் துயினீங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் வெற்றி விடையா ரருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம் பொற்றிண் கல்லா யினகண்டு புகலூ ரிறைவ ரருள்போற்றி, | 50 | (இ-ள்) சுற்றும்...அளவில் - தம்முடனிருந்த தொண்டர்களும் துயிலும்போது; துணை...பரவைகேள்வனார் - தாமரை மலர் போன்ற இரண்டு திருக்கண்களையும் பற்றிக் கொண்ட துயில் நீங்கப் பள்ளியுணர்ந்தாராகிப் பரவையாரது கணவனாராகிய நம்பியாரூரர்; வெற்றி....கண்டு - வெற்றி பொருந்திய இடபத்தை உடைய சிவபெருமான் றிருவருளாலே, வெந்த மட்செங்கல்லே விரிந்து ஒளிவீசும் செம்பொன்னாலாகிய திண்ணிய கல்லாகியவற்றைக் கண்டு; புகலூர்...போற்றி - திருப்புகலூர் இறைவரது திருவருளைத் துதித்து, (வி-ரை) கண்பற்றும் துயில் - இயல்பாய்ப் பொருந்தாது வந்து பற்றிய என்றது குறிப்பு. பள்ளி உணர்ந்தார் - துயில் விட்டு எழுந்தார். பள்ளி உணர்ந்தாராகி; முற்றெச்சம்; உணர்ந்தார் - கண்டு - போற்றிப் பாடினார் - என வரும்பாட்டுடன் முடிந்தது. வேம் மண்கல்லே வெந்த மண்ணாலாகிய செங்கல்லே. வேம் - வேகும்; வெந்ததனாலாகிய. விரிசுடர்ச் செம்பொற்றிண் கல் - விரிசுடர் - ஒளி வீசும்; செங்கல் செம்பொற்கல்லாயினது. திண்கல் - பொன்னாதலின் செறிவுடைய திணிந்த கட்டிக்கல்; திண்மை - உலோகங்களில் வைத்துப் பொன்னினது செறிந்த தன்மை (Density) யும் கனமும்; பொற்பாளங்களைச் செங்கல் போன்ற அளவுபட வார்த்துச் சேமிக்கும் வழக்கும் காண்க. போற்றி - எழுந்து - புக்கு - வணங்கிப் - பாடினார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. கல்லாயிட - கனகமாக - என்பனவும் பாடங்கள். |
|
|