தொண்டருணரமகிழ்ந்தெழுந்து துணைக்கைக் கமலமுகை தலைமேற் கொண்டு கோயி லுட்புக்குக் குறிப்பி லடங்காப் பேரன்பு மண்டு காத லுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை பண்டங் கிசையிற் "றம்மையே புகழ்ந்"தென் றெடுத்துப் பாடினார். | 51 | (இ-ள்) தொண்டர் உணர - உடன் துயில்கொண்ட அடியார்களும் துயில் நீங்க; மகிழ்ந்து ...புக்கு - மகிழ்ச்சியுடன் எழுந்து இரண்டு கைகளையும் தாமரை முகைபோலச் சேர்த்துத் தலையின்மேற் கூப்பிக்கொண்டு திருக்கோயிலினுள் புகுந்து; குறிப்பில்....வணங்கி - தமது அறிவிற் குறிக்கொள்ளும் அளவிலடங்காத பேரன்பு செறிந்த ஆசையோடும் வணங்கி; வாய்த்த....பாடினார் - வாய்ப்புடைய இனிய தமிழ் மொழிமாலையினைப் பண்தங்கிய இசையுடன் "தம்மையே புகழ்ந்து" என்று தொடங்கிப் பாடியருளினார். (வி-ரை) எழுந்து - திருமுற்றத்தில் ஒருமருங்கு பள்ளிகொண்ட இடத்தினின்றும் எழுந்து; துணைக் கைக்கமல முகை தலைமேற்கொண்டு - இரண்டு கைகளையும் அஞ்சலியாகத் தலைமேற் கூப்பிய நிலையில் கூடிய கைகளிரண்டும் தாமரை மொட்டுப் போல இருந்தன என்பது. குறிப்பில் அடங்காப் பேரன்பு - அன்பு பெருகிச் சென்றமையால் அது செலுத்தப்படும் இடத்தில் அளவு கடந்து குறிநிலை கொள்ளாது மேற்செல்லுதல் பற்றிக் குறிப்பில் அடங்கா என்றார். மண்டுகாதல் - குறிப்பிலடங்காப் பேரன்பு, செறிந்த காதலாய் விளைந்தது. வாய்த்த - ஈண்டுப் பொருளுக்கும் அருளுக்கும் ஏற்றபடி வந்து வாய்க்கப் பெற்ற. பண் தங்கு இசை - பண் - பதிகப்பண்ணாகிய கொல்லிப்பண்; இசை பண் தங்குதலாவது - பண்ணோடு இசை பொருந்தி நிகழ்ந்த மாறுகொள்ளாதிருத்தல். வாழ்த்து மதுர - என்பதும் பாடம். |
|
|