பதிகம் பாடித் திருக்கடைக்காப் பணிந்து பரவிப் புறம்போந்தே எதிரி லின்ப மிம்மையே தருவா ரருள்பெற் றெழுந்தருளி நிதியின் குவையு முடன்கொண்டு நிறையு நதியுங் குறைமதியும் பொதியுஞ் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூன்மணிமார்பர், | 52 | (இ-ள்) பதிகம்....போந்தே - திருப்பதிகத்தினைப் பாடித் திருக்கடைக் காப்பும் சாத்தித் துதித்துப் புறத்திற்போந்து; எதிரில்...எழுந்தருளி - ஒப்பில்லாத இன்பத்தினை இம்மையிலேயே தருவாராகிய திருப்புகலூர் இறைவரது அருள்விடை பெற்று எழுந்தருளிச் சென்று; நிதியின் குவையும் உடன்கொண்டு - திருப்புகலூரிற் பெற்ற செம்பொற் கட்டிகளையும் உடனே கொண்டு; நிறையு நதியும்...மணிமார்பர் - நிறையும் நீரினை யுடைய கங்கையினையும் கலைகுறைந்து வந்தடைந்த மதியினையும் சேர உட்பொதிந்து வைத்த சடையினையுடைய சிவபெருமானது திருப்பனையூரினுட் புகுவாராகிய முப்புரி நூலினையும் மணி வடங்களையுமணிந்த மார்பினையுடைய நம்பிகள், (வி-ரை) புறம் - திருக்கோயிலின் புறம்பு. எதிரில்....தருவார் - திருப்புகலூரிறைவர். திருப்பதிகக் கருத்துப் போற்றப்பட்டது. எதிரில் - இணையில்லாத. அருள் பெற்று - அருள் விடை பெற்று. நிதியின் குவை - செம்பொற் கட்டிகள். குவை - திரட்சி - திரண்ட கட்டிகள்; குவி - பகுதி. நிறையும் நதி - குறைமதி - முரண் அணி; நிறைவாய்ப் பெருகி வந்த நதியைச் சிறுகச் செய்தும், குறைந்து வந்த மதியைப் பெருகச் செய்தும் அருளிய எல்லாம் வல்லவர் என்பது குறிப்பு. பொதிதல் - நெருங்கியிடம்பெறச் செருகி வைத்தல். மார்பர் புகுவார் - புகுவார் - புகுவாராகி; எதிர் சென்று என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க. புரிநூல் மணி மார்பர் - நூலும் மணி வடங்களும் பூண்ட மார்பர் உம்மைத் தொகை; வைதிகத் திருவும் மன்னவர் திருவும் உடையவர். தடுத்தாட்கொண்ட புராணம் பார்க்க. மணி - அழகுடைய என்றலுமாம். திருப்பனையூர் புகுவார் - திருப்புகலூரினின்றும் திருவாரூருக்கு வருமிடையில் உள்ளது திருப்பனையூர். திருவாரூர் செல்லும் சாலைக்கு இதன் வழியாய்ச் செல்வது சுருங்கிய வழியாதலின் புகுவார் என்றார். புகுதல் - ஊர்ப்புற எல்லையினைச் சார்தல். |
|
|