செய்யசடையார் திருப்பனையூர்ப் புறத்துத்திருக்கூத்தொடுங்காட்சி எய்த வருள வெதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி ஐயர் தம்மை "யரங்காட வல்லா ரவரே யழகிய"ரென் றுய்ய வுலகு பெறும்பதிகம் பாடி யருள்பெற் றுடன் போந்தார். | 53 | (இ-ள்) செய்ய சடையார்....அருள - செம்மையாகிய சடையாராகிய சிவபெருமான் திருப்பனையூரின் புறத்திலே திருவருட் கூத்தினோடும் எதிர்காட்சி பொருந்தக் காட்டியருள; அங்கு...இறைஞ்சி - அவ்விடத்தே (ஊர்ப்புறத்திலே) எதிர் சென்று மேலோங்கிய விருப்பத்தினாலே நிலமுற விழுந்து வணங்கி; ஐயர்தம்மை - இறைவரை; அரங்காட...பாடி - "அரங்கில் ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே" என்ற கருத்துடையதாய் உலகம் செய்யப் பெறும் வாழ்வுதரும் திருப்பதிகத்தினைப் பாடி; அருள்....போந்தார் - திருவருளினைப் பெற்று உடனே சென்றருளினர். (வி-ரை) புறத்து - ஊர் எல்லைப் புறத்தில். திருக்கூத்தொடும் காட்சி எய்த அருள - ஆனந்தக் கூத்தாடிக் காட்சி தர. அங்கு - காட்சி தரக்கண்ட அவ்விடத்தே; ஊர் எல்லைப்புறத்தே. அரங்காட வல்லார் அவரே அழகியரே - பதிகக் கருத்துக்காட்டுமாறு; பாட்டுத்தோறும் வரும் முடிபுகளின் குறிப்புப் பார்க்க. முதற் பாட்டு முடிபு பார்க்க. உலகு உய்யப் பெறும் பதிகம் என்க. உய்யப் பெறுதலாவது உறுதிப் பொருளை இதனால் உபதேசிக்கப் பெற்று உய்யும் வழி பெறுதல். ஐயரரங்கிலாமோ - என்பதும் பாடம். |
|
|