வளமல் கியசீர்த் திருப்பனையூர் வாழ்வா ரேத்த வெழுந்தருளி அளவில் செம்பொ னிட்டிகைக ளான்மே னெருங்கி யணியாரூர்த் தளவ முறுவற் பரவையார் தம்மா ளிகையிற் புகத்தாமும் உளமன் னியதம் பெருமானார் தம்மை வணங்கி யுவந்தணைவார், | 54 | (இ-ள்) வளமல்கிய....எழுந்தருளி - வளம் பொருந்திய சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்கின்றவர்கள் துதிக்க எழுந்தருளிப் போய்; அளவில்...புக - அளவு காண முடியாத செம்பொற் கட்டிகளாகிய செங்கற்கள் ஆட்களின்மேல் நெருங்கி அழகிய திருவாரூரின்கண் முல்லை அரும்பு போன்ற முறுவலினையுடைய பரவையாரது திருமாளிகையிலே புக; தாமும்...உவந்தணைவார் - தாமும் தமதுளத்தில் நிலைத்த தமது பெருமானாராகிய புற்றிடங் கொண்டாரை வணங்கி மகிழ்வுடன் அணைவாராகி, (வி-ரை) இட்டிகை - செங்கல். பொன் இட்டிகைகள் - செங்கல் வடிவமைந்த செம்பொற் கட்டிகள். ஆள்மேல்.....புக - ஏவலாட்கள் தாங்கிச் சென்று பரவையார் திருமாளிகையினுள் சென்று சேர்க்க. பொற்கட்டிகளின் மிக்க கனத்தால் ஆள்மேல் என்றார். தாமும்...உவந்தணைவார் - தாம் அவர்களுடன் நேரே திருமாளிகையிற் செல்லாது தமது உள நிறைந்த இறைவரைச் சென்று வணங்கிய பின்னரே அங்குச் சென்றருளுவார். இம்மரபு பற்றி முன்னர்ப் பலவிடத்தும் உரைக்கப்பட்டது; பின்னும் கண்டு கொள்க; இதனை உலகர் உள்ளங்கொண்டு ஒழுகும் பொருட்டு ஆசிரியர் அங்கங்கும் வற்புறுத்தி எடுத்துக் காட்டி யருளுதல் வழக்கு. உளமன்னிய - தமது உள்ளத்தைவிட்டு நீங்காது, என்றும் எண்ணத்தில் நிலைபெறக் கொண்டிருக்கின்ற. தாமும் - அணைவார் - ஆட்கள் புகுத அதன்பின் தாமும் என்ற இறந்ததுதழுவிய எச்ச உம்மை. தம்பெருமானார் தம்மை - தம் - இருமுறை வந்தது இருபாலும் ஒட்டி நிகழும் தன்மை குறித்ததற்கு. உவந்தணைவார் - வந்து - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம்.
|
|
|