பாடல் எண் :3209

வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய கோயில் பலவு மணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடுந் தெய்வப் பெருமா டிருவாரூர்
முந்தி வணங்கி யினி திருந்தார் முனைப்பா டியர்தங் காவலனார்.
55
(இ-ள்) வந்து ....நாள் - எழுந்தருளிப் போந்து பரவைப் பிராட்டியார் மகிழும்படி தங்கியிருந்து பொருந்தியிருக்கும் நாட்களிலே; அந்தணாரூர்....இறைஞ்சி - அழகிய குளிர்ந்த திருவாரூரின் பக்கத்தில் அணித்தாக உள்ள கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்கி; சிந்தை...காவலனார் - மனமகிழ மிக விருப்பத்தோடும் தேவர் பெருமானாகிய புற்றிடங்கொண்ட பெருமானது திருவாரூரினை முற்பட வணங்கி முனைப்பாடி நாட்டவர்களின் தலைவராகிய நம்பியாரூரர் இனிதாக எழுந்தருளியிருந்தனர்.
(வி-ரை) பரவைப் பிராட்டியார் மகிழ வைகி - மகிழ்ச்சியாவது செம்பொன்னைத்திருப்பங்குனி உத்தர விழாவிற் பல வகையாலும் கொடை நேர்ந்து அடியார்க் களித்தனால் ஆயது.
ஆரூர் மருங்கு அணிய கோயில்கள் பலவும் - முன் உரைக்கப்பட்டன. இவை எண்ணிறந்தவை உள்ளன;
தெய்வப் பெருமாள் - தேவதேவர்; தேவர்கள் வந்து முறையிருந்து வழிபடும் சிறப்புக் குறித்தது; திருக்கூட்டச் சிறப்புப் பார்க்க.
திருவாரூர் முந்தி வணங்கி - திருவாரூரினை நாளும் வணங்கிப் பின் அணிய கோயில்களைச் சென்று வணங்கி மீண்டு திருவாரூரிற் சேர்ந்தவாறே, ஒரு நாளும் திருவாரூரை விட்டு நீங்கி அகலாது இனிதமர்ந்தார் என்பதாம்.
முனைப்பாடியர்தம் காவலனார் - திருமுனைப்பாடி நாட்டினரது தலைவர் என்று நம்பிகளது திருவவதாரம் பற்றி உரைத்தார்; திருவாரூரில் மகிழ்ந்திருப்பது தமது உலகத் தொடர்பன்றி அதனின்றும் சிறந்த உயிர்த் தொடர்பு பற்றி என்பதறிவித்தற்கு.