பாடல் எண் :3210

பலநா ளமர்வார் பரமர் திரு வருளா லங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற "தண்ணியல்வெம் மை"யினா னென்னுந்தமிழ்மாலை.
56
(இ-ள்) பலநாள்...போய் - பல நாட்கள் அவ்வாறு திருவாரூரில் விரும்பி எழுந்தருளி யிருந்த நம்பிகள் இறைவரது திருவருளாலே அங்கு நின்றும் சென்று; சிலை.....மகிழ்ந்து - பெரிய மேருமலையினை வில்லாகவுடைய வீரனாராகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருநன்னிலத்துப் பெருங் கோயிலினைச் சென்று சேர்ந்து வலம் வந்து திருக்கோயிலில் சென்று வணங்கி மகிழ்ச்சி பொருந்தி; தலமார்கின்ற.....தமிழ்மாலை - இந்நிலவுலகின் நிலவி விளங்குகின்ற "தண்ணியல் வெம்மையினான்" என்று தொடங்கும் தமிழ்மாலையினை; பாடினார் - பாடியருளினார்.
(வி-ரை) அமர்வார் - முன் சொன்னவாறு திருவாரூரிலே தங்கியபடியே அணிமையில் உள்ள கோயில்களுக்குச் சென்று சென்று மீண்டு எழுந்தருளியிருப்பாராகிய நம்பிகள்; அமர்வார் - வினைப்பெயர்.
திருவருளால் - திருவருட் குறிப்பாகிய விடை பெற்று மேல் வரலாற்றின் விளைவுகள் நிகழ வேண்டிய காரணம் பற்றிய திரு அருளினாலே.
சிலை - வில்; சிலையாக மேருவினைப் பிடித்த வீரனார்.
தலம் ஆர்கின்ற- தலம் - இந்நிலவுலகம்; ஆர்தல் - புகழ் நிறைந்து விளங்குதல்.
தண்ணியல் வெம்மையினான் - தட்பமுடைய வெம்மை; முரண் அணி; "அங்கங் குளிர்ந்தன லாடு மெங்க ளப்பன்"(அம்மை. மூத்த. பதிகம்); தண்ணியல்பாவது கருணை; வெம்மை - சங்காரம்; சங்காரமும் அருளேயாம் என்பது.
திருநன்னிலம் - இது மாடக்கோயில் என்னும் பெருங்கோயில்களுள் ஒன்று.