பாடல் எண் :3211

பாடி யங்கு வைகியபின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட வந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ வவ்வளவு நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை மல்க மணித்தோ ரணநிரைத்து,
57
(இ-ள்) வெளிப்படை. அங்குப்பாடி, எழுந்தருளியிருந்த பின்பு இறைவரது திருவீழிமிழலையில் உள்ள நீடிய வேத வொழுக்கத்தால் மேம்பட்ட அந்தணர்கள் திரண்டு கூடி நாடெங்கும் மகிழும்படி அவ்வளவும் நடைக்காவணமிட்டுப் பாவாடை விரித்துப் பக்கங்களில் வாழை கமுகுகள் வரிசையாகப் பொருந்தச் செய்து அழகிய மணிமாலைகள் தூக்கிய தோரணங்களை வரிசை பெறக் கட்டி,
(வி-ரை) நீடுமறையால் மேம்பட்ட அந்தணாளர் - "நான்மறையோர்" (5) "தெரிந்த நான்மறையோர்" (8) வேத வேதியர் (10) என்று நம்பிகளது பதிகத்தும், இவ்வாறே பிள்ளையாரது இப்பதியின் பதிகங்களிலும் பாராட்டப்பட்ட பெருமையுடையோர் என்பது குறிப்பு; "வீழி ஐஞ்ஞூற்றந்தணர்" என்பர். "ஐஞ்ஞூற்றந்தண ரேத்தும்" (திருவிசைப்பா).
அவ்வளவும் - நன்னிலத்தினின்றும் திருவீழிமிழலை அளவும். முழுதும் உம்மை முற்றும்மை. ஆறு வடமேற்காக ஆறுநாழிகையளவு தூரம் உண்டு.
நடைக்காவணம் - காவணம் - பந்தர். பாவாடை - கால் நிலம்படாது மிதித்து நடத்தற்காக இடும் பரந்த ஆடை; பரவுதல் - பரந்து இருக்க இடப்படுதல்.
கதலிபூக நிரை - தோரண நிரை - முன்னையன பக்கங்களிற் கட்டப்படுவன; பின்னையன மேலே கட்டப்படுவன; ஆதலின் வேறுபிரித் தோதினார். நிரைத்தல் - வரிசைபெறக் கட்டுதல்.
மணித் தோரணம் - மணிமாலைகளை இடையிடைத் தொங்க வைத்த தோரணங்கள். மணி - அழகு என்றலுமாம்.