பாடல் எண் :3212

வந்து நம்பி தம்மையெதிர் கொண்டு புக்கார்; மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர் கோயி றன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்,
58
(இ-ள்) வந்து...புக்கார் - இங்கு வந்து நம்பிகளை எதிர்கொண்டு புகுந்தனர்; மற்று அவரும்....இறைஞ்சி - அந்நம்பிகளும் மனமலர்ந்து சென்று திருவீழிமிழலையினை வணங்கி; சேண்...வணங்கி - நீண்ட ஆகாயத்தினின்றும் முன்னாளில் இழிந்து வந்த மொய்த்த ஒளியுடைய திருக்கோயிலினை முன்னே வணங்கி; பந்தம்....பணிகின்றார் - மலபந்தங்களை அறுக்கும் தம் பெருமானது திருவடிகளைத் துதித்துப் பணிகின்றாராகி,
(வி-ரை) மற்று அவரும் - அவ்வாறு எதிர்கொண்டு அழைக்கப்பட்ட அந்நம்பிகளும்; மற்று - வினைமாற்றில் வந்தது; அவர் - அகரம் முன்னறி சுட்டு; இறைஞ்சி - சென்று இறைஞ்சி; சென்று என்பது சொல்லெச்சம். சேண் விசும்பின் கோயில் - திருவீழிமிழலை விமானம் விட்டுணுவினால் ஆகாயத்திலிருந்து கொணர்ந்து தாபிக்கப்பட்டதென்பது வரலாறு; அதனால் விண்ணிழி கோயில் எனப்படும்.
பந்தம் அறுக்கும் - அடைந்தார்க்கு மலபந்தங்களை நீங்குகின்ற இறைவர்.
பணிகின்றார் - முற்றெச்சம். பணிகின்றாராகி; பணிகின்றாராகிப் பரவிச் சாத்தி என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.