பாடல் எண் :3213

படங்கொ ளரவிற் றுயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி
"அடங்கல் வீழி கொண்டிருந்தீ ரடியே னுக்கு மருளு"மெனத்
தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி யங்குச் சாருநாள்.
59
(இ-ள்) படங்கொள்....பெருமானை - படத்தையுடைய பாம்பின் மேல் பள்ளிகொள்ளும் விட்டுணுவும் தாமரை மலரில் இருக்கும் பிரமதேவனும் துதித்தற்கரிய விடங்கராகிய தேவ தேவரை; விரவும்...சாத்தி - பொருந்திய மயிர்ப் புளகத்துடனே துதித்து "அடங்கல் வீழி கொண்டிருந்தீர்; அடியேனுக்கு மருளும்" என்ற கருத்தினையும் முடிபினையுமுடைய பெரிய செவ்விய சொற்பொருளமைந்த தமிழ் மாலையைச் சாத்தி; அங்குச் சாருநாள் - அங்குத் தங்கி எழுந்தருளியிருக்கும் நாட்களிலே,
(வி-ரை) படம் - பாம்பின் படம்; அரவு - விட்டுணு பள்ளிகொள்ளும் ஆதிசேடன்.
விடங்கன் - உளியினாற் செதுக்கப்படாத திருமேனியுடையவன்; (டங்கம் - உளி).
விண்ணோர் பெருமான்; விட்டுணுவினால் வழிபடப்பட்ட தன்மை பற்றித் தேவர்கள் தலைவர் என்ற குறிப்புமாம்.
அடங்கல் வீழி.....அருளும் என - இது பதிகத்தின் மகுடமும் கருத்துமாம். பதிகம் (10) பார்க்க.
தடங்கொள் செஞ்சொல் - தடம் - பெருமை; பொருளின் பெருமை குறித்தது. "நற்றமிழ்" பதிகம் (10) பார்க்க.