பாடல் எண் :3214

"வாசி யறிந்து காசளிக்க" வல்ல மிழலை வாணர்பாற்
றேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ்சியத் தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள் பணிந்து "பொருவனா" ரென்னும்
ஆசில் பதிகம் பாடியமர்ந் தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
60
(இ-ள்) வாசி - அருள் பெற்று - வாசிதெரிந்து படிக்காசு அளிக்க வல்லவராகிய திருவீழிமிழலை இறைவரிடம் சிவவொளி மிகுந்த திருவருள்விடை முன் பெற்று (ச்சென்று); திருவாஞ்சியத்தடிகள்....அமர்ந்து - திருவாஞ்சியத்தில் உயிர்களின் பாசங்களை அறுத்து ஆட்கொள்ளும் இறைவரது திருவடிகளை வணங்கிப் "பொருவனார்" என்று தொடங்கும் குற்றமில் திருப்பதிகம் பாடியருளி அங்கு விரும்பி எழுந்தருளியிருந்து (பின்பு); அரிசிற்கரைப் புத்தூர் அணைந்தார் - அரிசிற் கரைப்புத்தூரினை அணுகச் சென்று சோர்ந்தருளினர்.
(வி-ரை) வாசி...மிழலைவாணர் - திருஞானசம்பந்த நாயனாருக்கு வாசியுடன் படிக்காசும், அரசுகளுக்கு வாசியில்லாக் காசும் தந்தருளிய வரலாறு குறிக்கப்பட்டது. 2467-ம், "இருந்துநீர் தமிழோடிசை கேட்கு மிச்சையாற் காசு நித்த னல்கினீர்" (பதிகம்) என்றதும் காண்க. அதுபற்றி அவ்வவர் புராண வரலாறுகளும் பார்க்க.
தேசுமிக்க திருவருள் - சிவஞான வொளி மிகுதியின் கண்ணே அறியப்படும் அருள் வெளிப்பாடாகிய விடை.
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் - இப்பகுதியில் வந்து அடைந்தோர்களது பாசம் என்க; ஆட்கொள்ளும் - ஆளாகக் கொண்டு முத்தி நல்கும். பொது வகையானன்றித் தலவரலாறும் சிறப்புக் குறிப்பு.
பொருவனார் - பதிகத்தின் தொடக்கம்; முதற் குறிப்பு; பதிகம் பார்க்க. மாசில் - குற்றத்தை இல்லையாகச் செய்யும் உபாயமறிவிக்கும் திறமுடைய; "அடியாரை ஊழ்வினை நலிய வொட்டாரே" என்பது முதலாக வரும் பதிகக் கருத்துப் பார்க்க.
அணைந்தார் - அணுகச் சென்று சார்ந்தனர் என்க; அங்குச் சேர்ந்து வழிபட்டது மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க.