செழுநீர் நறையூர் நிலவுதிருச் சித்தீச் சரமும் பணிந்தேத்தி விழுநீர் மையினிற் பெருந்தொண்டர் விருப்பினோடுமெதிர்கொள்ள மழுவோ டிளமான் கரதலத்தி லுடையார் திருப்புத் தூர்வணங்கித் தொழுநீர் மையினிற் றுதித்தேத்தித் தொண்டர் சூழ வுறையுநாள், | 61 | (இ-ள்) செழுநீர்....ஏத்தி - செழுமையாகிய நீர்ச் சிறப்பினையுடைய நறையூரில் நிலைபெற்ற திருச்சித்தீச்சரத்தினையும் பணிந்து துதித்து; விழுநீர்மையினில்....வணங்கி - நிலமுற விழுந்து வணங்கித் தாமும் தன்மையினையுடைய பெருமை வாய்ந்த திருத்தொண்டர்கள் விருப்பத்தோடும் எதிர்கொள்ளச்சென்று, மழுவினோடும் இளமான் கன்றைத் திருக்கரத்தில் ஏந்திய சிவபெருமானது திருப்புத்தூரினை வணங்கி; தொழு நீர்மையில்...உறையும் நாள் - தொழுது வழிபடும் விதிமுறைப்படி வணங்கித் துதித்துப் பரவி அங்குத் தொண்டர்கள் சூழ எழுந்தருளிய நாட்களில், (வி-ரை) செழுநீர் - காவிரிக் கரையாதலாலும் காவிரி நீர் பாய்தலாலும் நீர் வளம் பற்றிக் கூறினார். "வாரும் மருவி மணிபொன் கொழித்துச் சேரும்" என்றது முதலாக வருவன பதிகக் குறிப்புக்கள். "செழுநீர்நறையூர்" (5). நறையூர் - ஊர்ப்பெயர்; சித்தீச்சரம் - கோயிலின் பெயர்; நறையூரில் உள்ள கோயில் என்பது. சித்தீச்சரமும் - உம்மை முன் அணைந்தார் என்ற அரிசிற்கரைப்புத்தூரை அணையச் சார்ந்தவர் வழியில் இதனையும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. பணிந்தேத்தி - அரிசிற் கரைப்புத்தூரைச்சார அணைந்த நம்பிகள் இடையில் இப்பதியினைப் பணிந்து பாடியருளினார். விழுநீர்மை - "தாழ்வெனுந் தன்மை யோடு சைவமாஞ் சமயஞ் சாரும், ஊழ் பெறலரிது" (சித்தி) என்று இதன் அருமைப் பாட்டினை ஞான சாத்திரம் விரித்துக் கூறிற்று. "வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன்" (பிள். தேவா. ஆலவாய்) என்ற திருவாக்கும் இத்தன்மையினைப் பேசியது. பெருந்தொண்டர் என்ற குறிப்புமிது. மழுவோடு...உடையார் - மானும் மழுவும் இரு கையிலும் ஏந்தியவர்; சிவபெருமான். தொழுநீர்மை - தொழுதற்கு விதித்த முறை. மழுநீடிளமான் மறிகரத்தில் - என்பதும் பாடம். |
|
|