பாடல் எண் :3216

புனித னார்முன் புகழ்த்துணையார்க் கருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற வெழுந்தருளி மூரி வெள்ளக் கங்கையினிற்
பனிவெண் டிங்க ளணிசடையார் பதிகள் பலவும் பணிந்துபோந்
தினிய நினைவி லெய்தினா ரிறைவர் திருவா வடுதுறையில்.
62
(இ-ள்)புனிதனார்...போற்றிசைத்து - இறைவர் முன்னாளில் புகழ்த்துணை நாயனாருக்கு இப்பதியில் படிக்காசு அருள் செய்த அருட்டிறத்தினைப் போற்றிப்பாடி; முனிவர் போற்ற எழுந்தருளி - முனிவர்கள் போற்ற எழுந்தருளிச் சென்று; மூரி...போந்து - பெரிய வெள்ளமாகப் பெருகும் கங்கையில் குளிர்ந்த சந்திரனை அணியும் சடையினையுடைய இறைவர் எழுந்தருளிய பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று; இனிய...திருவாவடுதுறையினில் - மகிழ்ச்சி பொருந்திய திருவுள்ளத்தினுடனே இறைவரது திருவாவடுதுறையில் வந்து சேர்ந்தருளினர்.
(வி-ரை) புகழ்த்துணையார்க்கருளும் திறமும் போற்றிசைத்து - பதிகம் 6-வது பாட்டுப் பார்க்க. "அகத்தடிமை செய்யுமந்தணன்" என்று புகழ்த்துணையாரைச் சிறப்பித்து அவருக்கு நித்தமும் காசு அருளிய சரிதம் போற்றப்பட்டது காண்க.
முனிவர் போற்ற - அந்தணர்கள்; சிவ வேதியர்கள்.
பதிகள் பலவும் - அரிசிற்கரைப் புத்தூரினின்றும் திருவாவடுதுறையிற் சேரும் இடையில் அனேகம் பதிகள் உள்ளன; இவை திருச்சிவபுரம். திருநாகேச்சரம், திருவிடைமருதூர், தென் குரங்காடுதுறை முதலாயின என்பது கருதப்படும்.
இனிய நினைவு - மனமகிழ்ச்சி; நினைதொறும் இனிப்ப வருவது இறைவரது நினைவு; "நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெம்போதும், அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங் குனிப்புடையான்" (திருவா).
எய்தினார் - வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு.
மூரிவெள்ளம் - பெருவெள்ளம்; அடங்காத நீர்ப் பெருக்கு.
கங்கையினில் திங்கள் அணிதல் - ஒரு சேர அணிதல்; "வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை, யிளந்திங்களும் மிருக்குஞ் சென்னி" (அம்மை - இரட்டை மணிமாலை1) "அப்புனலிற், சரிகின்ற திங்களோர் தோணியொக்கின்றது" (பொன்வண். அந்தாதி - 67)