விளங்குந் திருவா வடுதுறையின் மேயார்கோயில்புடைவலங்கொண் டுளங்கொண் டுருகு மன்பினுட னுள்புக் கிறைஞ்சி யேத்துவார் வளங்கொள் பதிக"மறையவ"னென்றெடுத்து வளவன் செங்கணான் தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலைசாத்தினார். | 63 | (இ-ள்) விளங்கும்....வலங்கொண்டு - விளங்குகின்ற திருவாவடுதுறையில் எழுந்தருளிய இறைவரது திருக்கோயிலினைச் சுற்றி வலமாக வந்து; உளங் கொண்டு....ஏத்துவார் - உள்ளத்தினைத் தன் வசமாக்கி உருக்கும் அன்பினோடும் திருக்கோயிலினுக்குள்ளே புகுந்து வணங்கிப் போற்றுவாராகி; வளங்கொள்...எடுத்து - வளமுடைய திருப்பதிகத்தினை "மறையவன்" என்று தொடங்கி; வளவன்...சிறப்பித்து - கோச் செங்கட் சோழரது இடம் பொருந்திய பிறப்பினையும் சிறப்பித்துப் போற்றி; தமிழ்ச் சொன்மாலை சாத்தினார் - தமிழ்ச் சொல்மாலையாகிய அத்திருப்பதித்தினைச் சாத்தி யருளினார். (வி-ரை) விளங்கும் - அருள் விளங்கும்; உலகு விளங்குதற்குக் காரணமாகிய; இவ்விளக்கமாவது இங்குத் திருமூல நாயனார் பசுக்கள் உய்யும்படி சிவாகமப் பொருளைத் திருமந்திரமாகத் தமிழில் வெளிப்படுத்தி யருளியதும், பிறவுமாம். அவர் சரிதம் பார்க்க. இத்திருப்பதிகத்தினுள், இறைவரருள் பலவும் விளங்கக் கண்டு அடைந்தேன் என்ற கருத்துப் பற்றியும் விளங்கும் என்றார். மறையவன் - இது பதிகத் தொடக்கம். முதற் குறிப்பு. வளவன் செங்கணான் - கோச்செங்கட் சோழ நாயனார். தளங்கொள் பிறப்பு - முன்பு சிலந்தியாயிருந்து பணி செய்த அந்தத் தலத்திலேயே அரசராக வந்து பிறந்த பிறவி: "தொடர்ச்சி" என்ற பதிகம் இக்குறிப்புத்தருவதாம்; தலம் தளம் என வந்தது. வடமொழி வழக்கு. தளம் மேன்மை என்றனர் முன் உரைகாரர்கள். சிறப்பித்து - போற்றி - துதித்து; பதிகப் பாட்டுப் பார்க்க. மறையவன் என்றெடுத்துச் சிறப்பித்துச் சாத்தினார் - என்று இப்பதிகம் இன்னதென விளங்க வைத்தது. பின்னரும் நம்பிகள் இப்பகுதியில் வந்து அருளிய "யாறெனக்குற வமார்களேறே" என்பது முதலிய பதிகங்களினின்றும் பிரித்துணர்த்தும் பொருட்டு ஆசிரியர் காட்டிய பேரருட்டிறமாகும். சொல்லாலும் பொருளாலும் கண்டுகொள்ளும் வண்ணம் சுட்டிக்காட்டிய நயமும் காண்க. ஏத்துவார் - வினைப் பெயர். ஏத்துவார் - சாத்தினார் என்க. புடை - பக்கமாகச் சூழ்ந்து; புடையின்கண். |
|
|