சாத்தி யங்கு வைகுநாட் டயங்கு மன்ப ருடன்கூடப் பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப் பெண்ணோர் பாகத் தண்ணலார் தீர்த்தப் பொன்னித் தென்கரைமேற் றிகழும் பதிகள் பலபணிந்து மூர்த்தி யார்த மிடைமருதை யடைந்தார்முனைப்பாடித்த தலைவர். | 64 | (இ-ள்.) சாத்தி...அருள் பெற்று - முன் கூறிய தமிழ்ச் சொன் மாலையினைச் சாத்தி அங்கு எழுந்தருளியிருக்கும் நாளிலே விளங்கும் அன்பர்களுடனேகூட மீண்டும் வணங்கி அருள்விடை பெற்றுச் சென்று; பெண்ணோர்.....பணிந்து - உமையம்மையாரை ஒரு பாகத்தில் உடைய இறைவரது தீர்த்தமாகிய காவிரியின் தென்கரைமேல் விளங்கும் பதிகள் பலவற்றையும் பணிந்துபோய்; மூர்த்தியார்....தலைவர் - இறைவரது திருவிடை மருதூரிற் சென்று முனைப்பாடி நாட்டுத் தலைவராகிய நம்பிகள் அடைந்தருளினர். (வி-ரை.) சாத்தி - "சாத்தினார்" என்று முன் பாட்டிற் கூறி முடித்ததனைத் தொடர்ந்து கூறியது. பேர்த்தும் - மீண்டும் மீண்டும்; பலநாளும். தீர்த்தப்பொன்னி தீர்த்தம் - தூய்மை, பரிசுத்தம்; அதனைச் செய்யும் நீருக்கு ஆகிவந்தது; "தீர்த்தன்"என்று இறைவரைக் கூறுவதும் இப்பொருட்டு. பதிகள் பல - இவை திருவாவடுதுறைக்கும் திருவிடைமருதூருக்கு மிடையில் காவிரித் தென்கரையில் உள்ளவை. இவை திருக்கோழம்பம், திருச்சாத்தனூர், தென்குரங்காடுதுறை முதலியன என்பது கருதப்படும். தென்கரைமேல் - இருபதிகளும் உள்ள தென்கரை வழியாகவே நம்பிகள் சென்றருளினர் என்பது. மேல் - என்றதனால் காவிரியின் தென்கரையும் அதன் கிளைகளாய்த் தென்புறமுள்ள கிளை ஆறுகளின் தென்புறமும் கொள்ளப்படும். மூர்த்தியார் - பெருந்தலைவர்; "மகாலிங்கம்" என்னும் இடை மருதீசர் தன்மை குறிக்கப்பட்டது. "எந்தை பிரானே" என்ற பதிகக் குறிப்பும் காண்க. முனைப்பாடி - நம்பிகள் அவதரித்த நாடு; அந்நாட்டரசரால் வளர்க்கப்பட்டனராதலின் இவரும் அந்நாட்டுத் தலைவர் என்பதும் குறிப்பு. |
|
|