மன்னு மருதி னமர்ந்தவரை வணங்கி மதுரச் சொன்மலர்கள் பன்னிப் புனைந்து பணிந்தேத்திப் பரவிப் போந்து தொண்டருடன் அந்நற் பதியி லிருந்தகல்வா ரரனார் திருநா கேச்சரத்தை முன்னிப் புக்கு வலங்கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார். | 65 | (இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற மருதினிடமாக விரும்பி எழுந்தருளியுள்ள இறைவரை வணங்கி இனிய தமிழ்ச் சொல்லாகிய மலர்களை மாலையாகப்புனைந்து வணங்கித் துதித்துச் சென்று, திருத்தொண்டர்களுடனே அந்த நல்ல பதியினின்றும் நீங்குகின்றாராய்ச்; சிவபெருமானது திருநாகேச்சரத்தை நினைந்து சென்று திருக்கோயிலினுள் புகுந்து வலங்கொண்டு இறைவரது திருவடிகளை வணங்கினார். (வி-ரை.) மருது - திருவிடைமருதூர் என்னும் பதி என்றும், அப்பெயர் போந்த காரணமாகி அப்பதியிலுள்ள மருதமரம் என்றும் உரைக்க நின்றது; "அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த, பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ" (திருவா). சொன்மலர்கள் பன்னிப் புனைந்து - சொல்லாகிய மலர்களை ஆய்ந்து தெரிந்துதெடுத்து மாலையாகப் புனைந்து; பன்னுதல் - புனைதல் - சொற்களுக்கும் மலர்களுக்கும் ஒக்கும்; பன்னுதல் - ஆய்தல்; புனைதல் - தொடுத்தல்; ஏகதேச வுருவகம்; பன்னுதல் - பலமுறையும் பலவாறும் ஒருபொருளைச் சொல்லுதல் என்ற வழக்கும் காண்க. ஏத்திப் பரவி - ஏத்துதல் - பதிகத்தால் போற்றுதல். பரவுதல் - தோத்திரித்தல். முன்னிப்புக்கு - நினைந்தவாறே சென்று திருக்கோயிலினுள் புகுந்து என விரைவு தோன்றக் கூறியவாறு. |
|
|