பாடல் எண் :3220

பெருகும் பதிகம் "பிறையணிவா ணுதலாள்" பாடிப்பெயர்ந்து, நிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே, யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து, கலய நல்லூர் மருங்கணைந்தார்.
66
(இ-ள்.) பெருகும்...பெயர்ந்து - இன்பம் பெருகும் "பிறையணி வாணுதலாள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடி அங்குநின்றும் சென்று; நிறை...போந்தே - குறைவில்லாத நிறைவாகிய சிவச் செல்வம் நிறையும் திருச்சிவபுரத்தில் சேர்ந்து தேவர் தலைவராகிய சிவபெருமானது திருவடிகளை வணங்கி உருகும் சிந்தையுடனே மேற்சென்று; உமையோர்...பணிந்து - உமையம்மையைப் பாகத்தில் உடைய இறைவர் தாம் மகிழ்ந்து பொருந்தும் பதிகள் பிறவற்றையும் பணிந்து சென்று; கலயநல்லூர் மருங்கு அணைந்தார் - திருக்கலயநல்லூரின் பக்கத்தில் அணைந்தருளினர்.
(வி-ரை.) பெருகும் - இன்பம் பெருகுதற்கு ஏதுவாகிய; இன்பம் - சொல்லெச்சம்; இது சிவனடிமைத் திறத்தின் வரும் குறையாத இன்பம்; பெருக்கும் என்பது பெருகும் என நின்றது.
பிறையணி வாணுதலாள் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
திரு - சிவத் திரு; முத்திச் செல்வம்.
பதிகள் பிற - இவை சிவபுரத்திற்கும் கலைய நல்லூருக்கும் இடையில் உள்ளவை என்பது கருதப்படும். இப்போது தெரியக்கூடவில்லை.