பாடல் எண் :3221

செம்மை மறையோர் திருக்கலைய நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு "குரும்பைமுலை யுமையா"ளென்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித் திசையின் விளம்பினார்.
67
(இ-ள்.) செம்மை...தொழுதெழுவார் - செம்மை நெறியில் நின்றொழுகும் மறையோர்கள் வாழும் திருக்கலயநல்லூ ரிறைவரது சேவடிகளின் கீழே முக்கரணங்களும் ஒன்றிய வணக்கம் பொருந்த வணங்கித் திருமுன்பு தோத்திரித்துத் தொழுது எழுவாராகி; கொம்மை...திருப்பதிகம் - பெருமையுடைய "குரும்பை முலை மலர்க்குழலி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினை; மெய்ம்மை..விளம்பினார் - மெய்ம்மையாகிய மாபுராண வரலாறுகள் பலவற்றையும் சிறப்பாக எடுத்துக் கூறிப் பண் இசை பொருந்தப் பாடியருளினார்.
(வி-ரை.) செம்மை - சைவ ஒழுக்கத்துள் நிற்கும்; மறையோர் - கலைய நல்லூர் மறையோர் வாழும் பதி என்பது: "திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்" என்புழிப்போல.
மும்மை வணக்கம் - மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களும் ஒன்றித்துப் பொருந்தும் வணக்கம்.
எழுவார் - விளம்பினார் - என்று கூட்டுக. எழுவார் - முற்றெச்சம்.
குரும்பைமுலை மலர்க்குழலி என்பது பதிகத் தொடக்கம். "மலர்க்குழலி" என்றதனை உமையாள் எனப் பொருள் விரித்துக்கொண்டார்.
மெய்ம்மை....சிறப்பித்து - பதிகத்துள் ஒவ்வோர் பாட்டிலும் மாபுராண வரலாறுகளுள் ஒவ்வொன்றைச் சிறப்பாக விரித்து மிக அழகாகப் போற்றியிருத்தல் காண்க. இவற்றைக் குறிக்கொள்ளும்படி ஆசிரியர் வைத்தருளிய ஆணை.
இசை - பதிகப் பண்ணாகிய காந்தாரம். இப்பதிகம் பயின்று ஓதப்பட்டு வருதலும் காண்க.
மெய்ம்மைப் புராணம் - மாபுராணங்களுட் பேசப்படும் வரலாறுகளும் அனைத்தும் மெய்யேயாம்; ஒவ்வோர் மெய்ம்மையினை உணர்த்துவன; மெய்யாகிய (சத்) இறைவரைப் பற்றியன என்ற பலவும் கொள்க.