அங்கு நின்று திருக்குடமூக் கணைந்து பணிந்து பாடிப்போய், மங்கை பாகர் வலஞ்சுழியை மருவிப் பெருகு மன்புருகத் தங்குகாத லுடன்வணங்கித் தமிழாற் பரசி, யரசினுக்குத் திங்கண் முடியா ரடியளித்த திருநல் லூரைச் சென்றணைந்தார். | 68 | (இ-ள்.) அங்கு...போய் - அப்பதியினின்றும் திருக்குட முக்கினை அணைந்து வணங்கித் திருப்பதிகம் பாடிச் சென்று; மங்கை...பரசி உமைபாகராகிய இறைவரது திருவலஞ் சுழியினைச் சார்ந்து, பெருகும் அன்பு உள்ளத்தினை உருகச் செய்ய நிரம்பிய பெரு விருப்பத்துடன் வணங்கித் தமிழ்ப் பதிகத்தினாலே போற்றி செய்து; அரசினுக்கு...சென்றணைந்தார் - மதியினைச் சடையில் அணிந்த பெருமானார் திருநாவுக்கரசருக்குத் திருவடியினைத் சூட்டியருளிய திருநல்லூரினைச் சென்று சேர்ந்தருளினர். (வி-ரை.) திருக்குடமுக்கு - திருவலஞ்சுழி - திருநல்லூர் - நம்பிகள் யாத்திரையாகச் சென்றருளிய வழி குறிக்கப்பட்டது. தங்குகாதல் - நிலைபெற்று மாறாத பெரு விருப்பம்; தங்கு - அப்பதியிற்றங்கும் என்றலுமாம். தமிழ் - தேவாரத் திருப்பதிகம்; தமிழாற் பரசி - நம்பிகள் வேதாகமங்களாலும் பரவிப் போற்றலாமாதலின் அதனிற் பிரித்துணரத் தமிழால் என்றார். இயல்பு குறித்த தென்றலும். அரசு - திருநாவுக்கரசர்; அரசினுக்கு...அடியளித்த - வரலாறு அவர் தம்புராணம் (1459 -1461) பார்க்க. திங்கள்முடியார்-வேண்டுவார் வேண்டிய ஈயும் திருவருளுடைமை குறிப்பு. திருக்குடமுக்கு திருவலஞ்சுழி திருநல்லூர் - இம்மூன்று பதிகளுக்கும் நம்பிகளது பதிகங்கள் கிடைத்தில. |
|
|