நல்லூ ரிறைவர் கழல்போற்றி நவின்று நடுவு நம்பர்பதி எல்லா மிறைஞ்சி யேத்திப்போந் திசையாற் பரவுந் தம்முடைய சொல்லூ தியமா வணிந்தவர்தஞ் சோற்றுத் துறையின் மருங்கெய்தி அல்லூர் கண்டர்கோயிலினுள்ளடைந்துவலங்கொண்டடிபணிவார். | 69 | (இ-ள்.) நல்லூர்...நவின்று - திருநல்லூர்ப் பெருமானது திருவடிகளைத் துதித்துப் பாடி; நடுவு...போந்து - இடையிலே உள்ள இறைவர் பதிகள் எல்லாவற்றையும் வணங்கித் துதித்துச் சென்று; இசையால்....எய்தி - தமிழிசையினாலே துதிக்கின்ற தமது பதிகங்களைப் பயனாக விரும்பி ஏற்று அணிந்துகொண்டருளிய இறைவரது திருச்சோற்றுச் துறையின் பக்கத்திற் சேர்ந்து; அல்லூர்...பணிவார் - விடந்தங்கிய கண்டராகிய சிவபெருமானது திருக்கோயிலினுள்ளே அடைந்து வலமாகச் சூழ்ந்து வந்து திருவடிகளிற் பணிவாராகி. (வி-ரை.) போற்றி நவின்று - துதித்துத் திருப்பதிகம் பாடி; நவிலுதல் - பதிகம் பாடுதல் என்ற பொருளில் வந்தது. நடுவு நம்பர்பதி எல்லாம் - இவை திருநல்லூருக்கும் திருச்சோற்றுத்துறைக்கும் இடையில் உள்ளன. இவை திருப்பாலைத்துறை, திருச்சக்கரப்பள்ளி முதலியன என்பது கருதப்படும். தம்முடைய சொல் ஊதியமா அணிந்தவர் - "மண்மேல் நம்மைச் சொற்றமிழ்பாடுக" (216) என்று கூறியருளிக் கேட்டு மகிழ்ந்தவர்; ஊதியம் - இலாபம்; ஏனையோர் பாடல்கள் அவ்வவர்க்கும் சிவானந்தப் பெரு வாழ்வு தேடித் தந்து அவ்வவர்க்கும் ஊதியம் தருவன; நம்பிகளது சொற்கள் அதுவேயுமன்றி இறைவரால் தமக்கு ஊதியமாக அணியப்படுவன என்பது; "பித்தனோ மறையோன்?" என்ற இகழ்ச்சிச் சொல்லினையே புகழ்ச்சி மொழியாகக் கொண்டு ஏற்றுஅணிந்த வரலாற்றுக் குறிப்புமாம். அல்லூர் கண்டர் - அல் - இருள்; - இங்குக் கருமை நிறமுடைய விடத்தினைக் குறித்தது; ஊர்தல் - பொருந்துதல். பணிவார் - பரவியபின் - பணிந்து முன்னுவார் (3224) - பணிந்து - வணங்கி - இறைஞ்சித் - தாழ்ந்து - பள்ளிகொள்ள (3225) - அருள - உணர்ந்து - ஏறி - அணைந்தார் (3226) என்று முடிபு படுத்திக்கொள்க. ஏத்திப்போய் - என்பதும் பாடம். |
|
|