பாடல் எண் :3224

"அழனீ ரொழுகி யனைய"வெனு மஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்,
70
(இ-ள்.) அழனீர்...எடுத்தருளி - "அழனீர் ஒழுகியனைய" என்று அழகிய சொற்களாலாகிய திருப்பதிகத்தினைத் தொடங்கியருளி; கழல்...பரவிய பின் - திருவடிகளைப் பெருகிய அன்பினாலே துதிக்கின்ற பெருவிருப்பம் மேலும் மிகும்படி போற்றியபின்; கெழு...போந்து - உரிமையாகிய தன்மையில் இறைவரது திருவருள் பெற்று மேற்சென்று; பரவையார்....முன்னுவார் - பரவையாரது கணவனாராகிய நம்பிகள் முழுமையும் திருநீற்றினை அணியும் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகள் பலவற்றையும் பணிந்து மேலும் செல்ல எண்ணுவாராகி,
(வி-ரை.) "அழனீர் ஒழுகி அணைய" எனும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. எடுத்து - தொடங்கி; அழலே நீர்போல வடிந்தது போன்ற என்பது இறைவரது செஞ்சடையின் சிறப்பு. தன்மை விரவிய உவமவணி.
நீடிய அன்பினிற் - கழல் போற்றும் என்க.
செழுநீர்மை - பொருந்தும் தன்மை. கெழுவுதல் - பொருந்துதல். முழு நீறு - முழுமையும் வீந்த காலத்திற் பெறும் சங்கார காலத்து நீறு; முழுமையைத் தரும் நீறு என்ற குறிப்புமாம்.
பதி பலவும் - சோற்றுத்துறையின் அணிமையில் உள்ளவை; தண்டங்குறை - திருவேதிகுடி முதலாயின என்பது கருதப்படும்.