பாடல் எண் :3225

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம் பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்,
71
(இ-ள்.) தேவர் பெருமான்..வணங்கி - தேவ தேவராகிய சிவபெருமானுறையும் திருக்கண்டியூரினைப் பணிந்து சென்று திரு ஐயாறதனைச் சென்று பொருந்தி வணங்கி; பூந்துருத்தி...இறைஞ்சி - திருப்பூந்துருத்தி யிறைவரது திருப்பாதங்களைத் தொழுது பணிந்து; சேவில்...தாழ்ந்து - இடபத்தில் வரும் இறைவரது திருவாலம் பொழிலின்கண் சேர்ந்து வணங்கி; இரவு....கனவின்கண் - அன்று இரவிலே பரவும் பள்ளி நிலையினில் அமர்ந்தருளிப் - பள்ளி கொண்டிருக்க அற்றை நாளிலே கனவின் கண்ணே,
(வி-ரை.) பாவு சயனம் - பாவுதலாவது உடல் முழுதும் பரப்ப நிலத்தில் கிடத்தியமர்தல். கைகால் முதலியவற்றை முடக்கிப் பள்ளிகொள்ளுதல் உடல் நலத்துக் கியைவதன்று என்பது மருத்துவநூற் கருத்து; பாவு சயனம் - பரப்பிய படுக்கை என்றலும் ஆம்.
தேவர்பெருமான்றிருப்பழனத் திருவையாறு நெய்த்தானம் - என்பதும்பாடம்.