அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி யன்பர் சூழ வுடன்புகுந்து பணங்கொ ளரவ மணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக் குணங்கொ ளருளின் றிறம்போற்றிக் கொண்ட புளகத்துடனுருகிப் புணர்ந்தவிசையாற்றிருப்பதிகம் "பொன்னார்மேனி"யென்றெடுத்து, | 73 | (இ-ள்.) அணைந்து....புகுந்து - சேர்ந்து திருக்கோபுரத்தை வணங்கி அன்பர்கள் உடன் சூழ்ந்துவரத் திருக்கோயிலின் உள்ளே புகுந்து; பணங்கொள்...வீழ்ந்து - படத்தினையுடைய பாம்பினை அணிந்த இறைவரது திருமுன்புபணிந்து நிலமுற வீழ்ந்து எழுந்து; பரங்கருணை....எடுத்து - அளக்கலாகாத கருணைத் தன்மையினை உட்கொண்ட பேரருளின் திறத்தினைத் துதித்துத் திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய உள்ளமுருகி இசையுடன் கூடிய திருப்பதிகத்தினைப் "பொன்னார், மேனி" என்று தொடங்கி, (வி-ரை.) பரங்கருணைக் குணங்கொள் அருள் - பரங்கருணையாவது அளவைகட் கெல்லாம் அப்பாற்பட்டது; பேரருள் - என்றபடி; "நினையா வென்னெஞ்சை நினைவிப்பானை" என்று அரசுகள் விதந்து பாராட்டிய அருளின் தன்மை; பரங்கருணையாய் முகிழ்த்த அருள்; கொண்ட - திருமேனி முழுதும் இடங்கொண்ட. புணர்ந்த இசை - பண் நட்டராகமாகிய பதிக இசை; இயல்பிற் றானேவந்து சொல்லோடு பொருந்திய என்பார் புணர்ந்த என்றார். |
|
|