"அன்னே யுன்னை யல்லாலியா னாரை நினைக்கே" னெனவேத்தித் தன்னே ரில்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது புறம்பணைந்து மன்னும் பதியிற் சிலநாள்கள் வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து பொன்னிக் கரையி னிருமருங்கும் பணிந்து மேல்பாற் போதுவார். | 74 | (இ-ள்.) அன்னே...புறம்பணைந்து - "அன்னே! உன்னையல்லாலினியாரை நினைக்கேன்" என்று துதித்து ஒப்பற்ற பெருமையினையுடைய பதிகமாலையினைச் சாத்தி வணங்கிப் புறத்தே அணைந்து; மன்னும்...மகிழ்ந்து - நிலைபெற்ற அத்திருப்பதியில் சிலநாள்கள் எழுந்தருளித் திருத் தொண்டர்களுடன் கூடி மகிழ்ந்தருளி; பொன்னிக் கரையின்....போதுவார் - காவிரியின் கரையில் இரண்டு பக்கமும் உள்ள பதிகளைப் பணிந்து மேற்குத் திசை நோக்கிச் செல்வாராகி; (வி-ரை.) "அன்னே...நினைக்கேன்" என - இது பதிகத்தின் மகுடமும் கருத்துமாம்; "யாரை நினைக்கேன்" என்றது இறைவர் "நினைக்க மறந்தாயோ?" என்ற சரித வரலாற்றுக்கு அகச்சான்றாகும். தன் நேரில்லாப் பதிகமலர் - தன் - தனக்கு; நேர் - ஒப்பு; இப்பதிகத்தின் ஒப்பற்ற தன்மை அதனை இந்நாளிலும் பெரிதும் மக்கள் விரும்பிப் பயின்று வருதலானுமறியப்படும். இப்பதிகத்தினுள் இறைவரை அன்னே, கேள், எம்மான், அண்ணா எனப் பலபடப் பாராட்டிய உரிமைத் திறம் காண்க. பொன்னிக்கரையின் இருமருங்கும் - இதுவரை காவிரித் தென்கரை வழியே சென்றருளிய நம்பிகள், இறைவரால் நினைவிலூட்டப் பெற்ற இதன் பின், இருமருங்கும் சென்று வழிபட்டனர் என்பதாம்; இவ்வாறு சென்றருளிப் பணிந்த பதிகள், வடகரையில் திருஅன்பிலாலந்துறை, திருத்தவத்துறை, வடகரைத் திருமாந்துறை முதலியனவும், தென்கரையில் திருக்கானூர், திருநியமம், திருவேங்கூர் முதலியனவுமாம் என்பது கருதப்படும். இவற்றுக்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! மேம்பால் - காவிரியின் வரவு நோக்கியவாறே மேற்குத் திசையில். போதுவார் - அணைந்து என மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிபுகொள்க. |
|
|