பாடல் எண் :3229

செய்ய சடையார் திருவானைக் காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர் கொள்ள விறைஞ்சிக் கோயி லுட்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீ ழார்வம் பெருக விழுந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.
75
(இ-ள்.) வெளிப்படை. சிவந்த சடையினை யுடைய இறைவரது திருவானைக்காவில் அணைந்து திருத்தொண்டர்கள் சேர முன்னே வந்து எதிர்கொள்ள வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து இறைவரது தாமரைபோன்ற திருவடிகளின் கீழே ஆசைபெருக விழுந்து எழுந்து திருமேனி முழுதும் உரோமபுளகம் போர்ப்பக் கண்களினின்றும் ஆனந்த வெள்ளம் பாயத் திளைப்பாராகி,
(வி-ரை.) செய்ய - சிவந்த; செம்மை தருகின்ற என்றலுமாம்.
எய்த - ஒரு சேர - ஒன்று கூட வர; பொருந்த என்றலுமாம்.
விம்முதல் - அன்பு மீதூரத் திளைத்தலால் உடல் அசைதல்.