"மறைக ளாய நான்கு"மென மலர்ந்த செஞ்சொற் றமிழ்ப்பதிகம் நிறையுங் காத லுடனெடுத்து நிலவு மன்பர் தமைநோக்கி "இறையும்பணிவா ரெம்மையுமா ளுடையா"ரென்றென் ரேத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரஞ் சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி, | 76 | (இ-ள்.) மறைகளாய...எடுத்து - "மறைகளாயின நான்கும்" என்று தொடங்கி விரிந்த செஞ்சொற்களாலாகிய தமிழ்ப் பதிகத்தினை நிறையும் பெருவிருப்பத்துடன் தொடங்கி; நிலவும்...ஏத்துவார் - நிலைபெறும் அன்பர்களைப் பார்த்து "இறையும் பணிவார் எம்மையு மாளுடையாரே" என்றென்றேத்துவார்; உறையூர்..உணர்ந்தருளி - உறையூர்ச் சோழரது மணியாரத்தை இறைவர் அணிந்து ஏற்றுக்கொண்டருளிய திருவருட்டிறத்தினை உணர்ந்தருளி, (வி-ரை.) மறைகளாய நான்கும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. அன்பர்...என்றென்று ஏத்துவார் - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம். "இறைவ னென்றடி சேர்வா ரெம்மையு மாளுடை யாரே" என்பது முதலாக அடியார் வணக்கமாகிய இக்கருத்தினைப் பதிகப் பாட்டுத்தோறும் காண்க; "எம்மையு மாளுடை யாரே" என்பது மகுடம்; இப்பதிகம் நம்பிகள் தம்மை எதிர் கொள்ள வந்த அடியார்களை நோக்கி அருளியது என்பதனை ஆசிரியர் அறிவித்தபடி; என்றென்று ஏத்துவார் - என்றென்று - பாட்டுத்தோறும்; பலமுறையும்; ஏத்துவார் - இஃது அடியாரைப் போற்றியபடி என்பதாம். உறையூர்ச்சோழன்....உணர்ந்தருளி - இச்சரித வரலாறு மேல் வரும் பாட்டில் விரிக்கப்படுவது. உணர்ந்தருளி - திருவுள்ளக் குறிப்பிற் கொண்டு அதனால்; வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது. உணர்ந்தருளிச் சாற்றினார் என வரும் பாட்டுடன் முடிக்க. சோழன் - சோழனுடைய என ஆறாம் வேற்றுமைத் தொகை. ஆரம் - ஆரம் - ஆரத்தை; இரண்டனுருபு விரிக்க. சாத்தும் - இறைவர் அணிந்து கொள்ளும்; "ஆரங்கொண்ட" (பதிகம்) பதிகத்துள் 7வது திருப்பாட்டில் இச்சரிதம் போற்றப்படலால் ஆசிரியர் இதனை விதந்தெடுத்துக் காட்டியருளினார். இறையும் - சிறிதேனும். உறையூர்ச் சோழன் - உறையூர் திருவானைக்காவின் அண்மையில் உள்ளது; சோழரது தலைநகரங்களுள் ஒன்று. |
|
|