வளவர் பெருமான் மணியாரஞ் சாத்திக் கொண்டுவரும்பொன்னிக் கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற அளவி றிருமஞ் சனக்குடத்து ளதுபுக் காட்ட வணிந்தருளித் தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் | 77 | (இ-ள்.) வளவர் பெருமான்...கேதமுற - சோழ அரசர் மணியாரம் அணிந்து கொண்டபடியே காவிரியின் கொழிக்கும் அலைகளையுடைய நீரிலே மூழ்குதலும் அது நீரினுள் தவறி வீழ்ந்து போக அதனால் அரசன் வருத்தமுற; அளவில்...அணிந்தருளி - அளவில்லாத திருமஞ்சனக் குடத்தினுள் அது புகுதமஞ்சனம் ஆட்டியபோது அதனை இறைவர் அணிந்தருளி; தளரும்...சாற்றினார் - மனந்தளர்ந்திருந்த அவ்வரசனுக்குக் கருள்புரிந்த தன்மையினைச் சிறப்பித்து ஏத்தியருளினார். (வி-ரை.) இத்திருப்பாட்டுத் "தாரமாகிய பொன்னி" என்ற பதிகத் திருப்பாட்டினை விரிவுரை செய்து, அதிற்குறித்த இத்தலச் சரித வரலாற்றினை விளக்கியது. சாத்திக்கொண்டு - அணிந்துகொண்டபடியே. கிளருந் திரைநீர் - அலைப்பெருக்குடைய நீர்ப்பருவக் குறிப்பு. வழுவிப்போக - நழுவி நீரினுள் வீழ்ந்துவிட. கேதமுற - அரசன் வருந்த; கேதம் - வருத்தம். அளவில் - அளவு படுத்தி அறியமுடியாத பெருமையுடைய. திருமஞ்சனப் பணிக்கருவிச் சிறப்பு. அதுபுக்கு...ஆட்ட - அருள் புரிந்த தன்மை - ஆரம். நழுவியபோது அரசன் "இறைவரே நீர் இதனை ஏற்றுக்கொண்டருளுக" என வேண்ட, அவ்வாறே அதனைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து அத்திருமஞ்சன நீரினை ஆட்டும்போது நீரினுடனே அதனைத் தமது திருமேனியில் அணிந்தருளினார் என்பது "நின்மல! கொள்ளென வாங்கே, ஆரங்கொண்ட" என்ற பதிகத்தாற் பெறப்படும். சிறக்க - யாவரும் சிறப்பா யறியும்படி; சாற்றினார் - எடுத்துப் போற்றினார். தலவரலாறாதலின் இறைவரது அருளின் பெருமை குறிக்க அதனைச் சிறக்கச் சாற்றினார் என்பது. திருவாரம் - என்பதும் பாடம். |
|
|