சாற்றி யங்குத் தங்குநாட் டயங்கும் பவளத் திருமேனி நீற்றர் கோயி லெம்மருங்குஞ் சென்று தாழ்ந்து நிறைவிருப்பாற் போற்றி யங்கு நின்றும்போய்ப் பொருவிலன்பர் மருவியதொண் டாற்றும் பெருமைத் திருப்பாச்சி லாச்சி ராமஞ் சென்றடைந்தார். | 78 | (இ-ள்.) சாற்றி...நாள் - முன் கூறிய தமிழ்மாலை சாற்றி அத்திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களிலே; தயங்கும்...போற்றி - விளங்கும் பவளம் போன்ற திருமேனியில் திருநீற்றினையுடையவரது திருக்கோயில்கள் எப்பக்கத்தும் உள்ளனவற்றைச் சென்று பணிந்து நிறையும் விருப்பினாலேதுதித்து; அங்கு நின்றும் போய் - அங்கிருந்து மேல்சென்று; பொருவிலன்பர்...அடைந்தார் - ஒப்பற்ற தொண்டர்கள் பொருந்திய திருத்தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சென்று அடைந்தருளினர். (வி-ரை.) சாற்றி - முன் பாட்டிற் கூறியவாறு பதிகம் சாற்றி முற்றுவித்து; பவளத் திருமேனி நீற்றர் - பவளம் போன்ற திருமேனிமேல் திருநீற்றினை உடையவ இறைவர். "பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்" (தேவா.) கோயில் எம்மருங்கும் சார்ந்து - இவை திருச்சிராப்பள்ளி, உறையூர் (திருமூக்கீச்சரம்), திருக்கற்குடி முதலாயின என்பது கருதப்படும். போற்றி - இப்பதிகங்கள் கிடைத்தில! பொருவில் - ஒப்பற்ற; பொரு - ஒப்பு. பொருவில்....பெருமை - இப்பதியில் வழி வழியாய்ச் சிவனடிமைத் திறத்து நின்ற கொல்லிமழவன் சரிதக்குறிப்பும், அவர் போன்ற தொண்டர்களின் பணியும் பெற வைத்தார். ஆளுடைய பிள்ளையார் புராணம் (2209 - 2218) பார்க்க. அதன் முன்னும் அந்நாள் முதல் இந்நாள் வரையும் தொண்டர் பணிவிடைகளின் பெருமை இப்பதியில் நிகழ்ந்து வந்ததென்பது தொண்டாற்றும் பெருமை என்பதனாற் பெறவைத்தார். இனி, நம்பிகளால், முன்னிலைப் படுத்தி இங்குப் பதிகம் பாட நின்ற பெருமையுடைய தொண்டர்களின் தன்மைக் குறிப்புமாம். |
|
|