சென்று திருக்கோ புரமிறைஞ்சித் தேவர் மலிந்த திருந்துமணி முன்றில் வலங்கொண் டுள்ளணைந்து முதல்வர் முன்னம்லீழ்ந்திறைஞ்சி நன்று பெருகும் பொருட்காத னயப்பும் பெருக நாதரெதிர் நின்று பரவி நினைந்தபொரு ளருளா தொழிய நேர்நின்று, | 79 | (இ-ள்.) சென்று...வீழ்ந்திறைஞ்சி - சென்று திருக்கோபுரத்தினை வணங்கித் தேவர்கள் பெருகியுள்ள திருந்தப்பாடுடைய அழகிய திருமுற்றத்தினை வலமா வந்து உள்ளே அணைந்து இறைவரது திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி; நன்று...பரவி - நன்மை பெருகும் பொருள் பெறும் காதலினால் அவ்விருப்பம் பெருக இறைவரெதிரே நின்று துதித்து; நினைந்த...நேர்நின்று - தாம் எண்ணிய பொருளினை இறைவர் அருளாதொழியத் திருமுன்புக்கு நேரேநின்று, (வி-ரை.) தேவர் மலிந்த திருந்து மணிமுன்றில் மலிதலாவது உட்புக்குச் சேவை செய்வதற்குக் காலம் பார்த்தும், உத்தரவை எதிர்நோக்கியும் கூடிக் காத்துக் கிடத்தல். நன்று பெருகும் பொருள் - நன்மை பெருகும்படி சிவ புண்ணியமாகிய மாகேசுர பூசைக்கும் ஆண்டவர் திருவிழாவுக்கும் பயன்படும் பொருள். காதல் நயப்பு - காதலினால் வந்த விருப்பம். பரவி - பரவிய பின்னும்; உம்மை தொக்கது. நினைந்த பொருள் - நினைந்து விரும்பி வேண்டிய பொருள். அருளாதொழிய - இறைவர் அருள்புரியாது நிற்க. நேர் நின்று - திருமுன்பு நின்றவாறே - திருமுன்பு விட்டகலாது அங்கிருந்த படியே. |
|
|