அன்பு நீங்கா வச்சமுட னடுத்த திருத்தோ ழமைப்பணியால் பொன்பெ றாத திருவுள்ளம் புழுங்க வழுங்கிப் புறம்பொருபால் முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பா டுடையார்போல் என்பு கரைந்து பிரானார்மற் றிலையோ?" வென்ன வெடுக்கின்றார். | 80 | (இ-ள்.) அன்பு நீங்கா...பணியால் - அன்பு மாறாத அச்சத்துடனே பொருந்திய திருத்தோழமைப் பணிவிடையினாலே; பொன் பெறாத...அழுங்கி - தாம் விரும்பியவாறே இறைவர்பாற் பொன் கிடைக்கப் பெறாத திருவுள்ளத்தில் புழுக்கம் நிகழ வருந்தி; புறம் பொருபால்....உடையார்போல் - புறம்பு நின்ற திருத்தொண்டர்களை முகநோக்கி முறைப்பாடு உரைப்பவர் போல; என்பு...எடுக்கின்றார் - எலும்பும் கரைந்துருகப் "பிரானார் மற்றிலையோ?" என்ற கருத்துட் கொண்ட மகுடம் அமையப் பதிகத்தினைத் தொடங்குகின்றாராய், (வி-ரை.) அன்பு நீங்கா அச்சமுடன் - அன்பு நிகழ்ந்தபோது அச்சமும், அச்சம் வந்தபோது அன்பும் நிலைபெறா; அவ்வாறன்றி ஈண்டு இரண்டும் ஒருங்கே நிகழ்ந்தன. "அச்சந், தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே" (574) என்ற கருத்துக் காண்க. அடுத்த தோழமைப் பணியால் - பதிகத்தின் வரும் கருத்து; தோழமை உரிமைபற்றி எழுந்தது என்பதாம். பொன் பெறாத - தாம் வேண்டியவாறு பொருள் பெறாத காரணத்தால்; பொன் - அந்நாளில் பொற்காசுகளே நாணயமாக வழங்கி வந்தன என்பது சரித வரலாற்றாலறிக. புறம் பொருபால்....உடையார்போல் - இறைவரது திருமுன்பு நின்றபடியே அவரது முகமாகப் பாராமல், அப்புறம் திரும்பிப் புறம்பு நின்ற தொண்டர்களை முகநோக்கி முறைப்பாடு அறிவிப்பார்போல; முறைப்பாடு உடையார் - முறை அறிவிப்பார்; முகப்பே - முக நோக்கி. என்பு கரைந்து - அன்பினால் எலும்பும் கரைய உருகி. "பிரானார் மற்றிலையோ?" என்ன - இது பதிகக் கருத்தும் குறிப்புமாகிய மகுடம்; இதன் கருத்தினை மேல்வரும் பாட்டில் ஆசிரியர் விரித்தல் காண்க. எடுக்கின்றார் - பதிகம் தொடங்குகின்றாராகி; முற்றெச்சம். எடுக்கின்றார் - உணர்த்தி - என்பார் - வழுத்தினர் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|