நித்தமு நீங்கா நிலைமையி னீங்கி நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால் உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை யொருமையா மெழுமையு முணர்த்தி "யெத்தனை யருளா தொழியினும் பிரானா ரிவரலா தில்லையே?" யென்பார் "வைத்தனன் றனக்கே தலையுமென் னாவு" மெனவழுத் தினார்வழித் தொண்டர். | 81 | (இ-ள்.) நித்தமும்...நொந்து - ஒருநாளும் நீங்குதலில்லாத நிலைமையின் (திருக்கயிலையினின்றும்) நீங்கி இந்நிலத்தினிடத்தின் அறிவுடன் பொருந்தும் பிறவியினிடத்துச் செலுத்திய காரணத்தை மனத்தில் உணர்ந்து வருந்தி; அடிமை...உணர்த்தி - அடிமைத் திறத்தின் ஒருமைப்பாடானது எழுபிறப்பிலும் தொடரும் நிலையினை எடுத்துக்கூறி; "எத்தனை...என்பார் - எவ்வளவும் திருவருள் புரியாதொழிந்தாலும் பிரானார் இவரல்லாது இல்லையே?" என்பாராய்; வைத்தனன்....வழித் தொண்டர் - "வைத்தனன் றனக்கே தலையுமென் நாவும்" என்று தொடங்கித் துதித்தருளினர் வழித்தொண்டராகிய நம்பிகள். (வி-ரை.) பதிகப்பாட்டின் யாப்பின்படியே சரிதம் கூறத்தொடங்கும் யாப்பமைதி காண்க. இஃது ஆசிரியரது கவி மரபுகளுள் ஒன்று. நித்தமும்...உணர்ந்து நொந்து - திருக்கயிலாயத்தினின்றும் மண்ணிலே வந்த பிறவியின் காரணத்தை உணர்ந்து மனம் வருந்தி; இவ்வரலாறு திருமலைச் சிறப்பிலும் தடுத்தாட் கொண்ட புராணத்திலும் விரித்துரைக்கப்பட்டது. நித்தமும் நீங்கா நிலைமையின் - நீங்குதலாவது, திருமேனி யிருப்பினாலே பிரியினும் நினைவினாலே ஒருபோதும் பிரியா நிலையிற் பிரிதல்; இது கயிலையினின்றும் பிரிந்து வரும்போது "மையன் மரனுட மாய்மயங் கும்வழி யைய னேதடுத்தாண் டருள் செய்யென" (38) வரங் கேட்டு அவ்வாறே அருளப் பெற்றுப் போந்த வரலாற்றினாலறியப்படும்; இவ்வாறன்றி நித்தமு நீங்கா நிலைமையாகிய திருக்கயிலைத் திருத்தொண்டி னிலையினின்றும் நீங்குதல் என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள்; நிலத்திடைப் புலங்கெழும்பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து புலங்கெழுமுதல் - இவ்வுலக நினைவினால் மூடப்படுதல்; உய்த்த - செலுத்திய; "தென்புவிமீது தோன்றி....அணைவா யென" ஆணையிட்ட; பிறப்பால் - பிறவியிலே; ஆல் என்ற மூன்றனுருபு ஏழனுருபின்கண் வந்தது; உருபு மயக்கம்; காரணமாவது "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகை தர" (35) என்பது; "மாதர் மேன்மனம் போக்கிட"என்றது அதன் வழித்தாய்வந்த துணைக்காரணம்; காரணத்தை உணர்ந்து நோதலாவது தென்றிசை வாழ்ந்திடவுள்ள யாத்திரைகளும் அடியார் பணிகளும் நிகழவும், குறித்த இருமணங்களுள் எஞ்சி நின்ற திருமணம் நிகழ்ந்திடவும் உள்ள மேற்சரித வரலாறுகள் நடைபெறுதற் கின்றியமையாத பொருள் அருளப்பெறாது வருந்துதல். அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி - அடிமை ஒருமை - அடிமைத்திறத்தில் இரண்டுற மனம் வையாது சிவனோடு ஒன்றித்து நின்ற ஒருமைப்பாடு; எழுமையும் - ஏழுவகைப் பிறவியின் கண்ணேயும்; உணர்த்தி - அடியார் மாட்டு உரைப்பார் போன்று இறைவரிடம் விண்ணப்பித்து; ஒருமையாம் ஏழுமையு மடிமைத்திறம் இப்பதிகத்துட் பாட்டுத்தோறும் கண்டுகொள்ளத் தக்கது. 5-8-10-11 - பாட்டுக்கள் பார்க்க; "உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமையுரைத் தக்கா லுவமனே யொக்கும்" என்ற முதற்பாட்டின் கருத்தினை எடுத்துக் காட்டும் வகையால் விரித்தபடி; பதிகம் 10-வது திருப்பாட்டுச் சிறப்பாய் எடுத்துக் காட்டப்பட்டது. எத்தனை...என்பார் - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு. எத்தனை - எத்தனையும்; முற்றும்மை தொக்கது; "ஏழு பிறவியிலும் உணர்த்திச் சிறிதும் அருளா தொழியினும்" என்றுரைப்பாரு முண்டு. வைத்தனன்...என - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. வழித் தொண்டர் - திருக்கயிலைத் தொண்டின் றொடர்ச்சியும், நம்பிகள் அவதரித்த மரபு "மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும்" மரபாதலும் குறிப்பு.வன்றொண்டர் - என்பதும் பாடம். |
|
|