பாடல் எண் :3238

கண்டவர் கண்கள் காதனீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டமர் குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் "காருலா விய"வென்
றண்டர்நா யகரைப் பரவி"யா ரணிய
விடங்கரா" மருந்தமிழ் புனைந்தார்.
84
(இ-ள்.) கண்டவர்....இறைஞ்சி - முன் கூறியவாறு கங்காள வேடராக இறைவரைக் கண்ட நம்பிகள் காதலினாலே தமது திருக்கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர்வெள்ளம் பொழியக் கைகள் கூப்பி வணங்கி; வண்டமர்....கூற்றாக - வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலையுடைய பெண்களது உள்ளத்தைக் கவர்கின்றபடி பலிக்கு வரும் இறைவரது திருவடிவினைக் கண்டு அவர்கள் கொண்டமயலினாலே வினாவுகின்ற பொருளுடைய சொற்களாக வைத்து; குலவு....புனைந்தார் - விளங்கும் சொல் "காருலாவிய" என்று தொடங்கித் தேவதேவரைத் துதித்து "ஆரணீய விடங்கரே" என்ற மகுடங் கொண்ட அருந் தமிழ்மாலை புனைந்தருளினர்.
(வி-ரை.) காதல் நீர் கண்கள் பொழிதர - என்க; காதல் நீர் - ஆனந்தக் கண்ணீர்.
வண்டமர்...வடிவு - பிட்சாடணத் திருவுருவம்; தாருகாவனத்து இருடியரது மனைவிமார்களிடம் இத் திருவுருவுடன் இறைவர் சென்று அவர்களை மயங்கச் செய்து அவர்களது மனங்களைக் கவர்ந்த வரலாறு கந்தபுராணத்துட் காண்க.
மயலால் அவர்கள் வினவு கூற்றாக - அத் திருவடிவத்தினைக் கண்டு அதில் ஈடுபட்டு மயங்கி அவர்கள் அவரை விளித்துப் பேசும் காதற் சொற்களாகிய பொருள் கொண்டு.
இது பதிகக் கருத்தும் குறிப்புமாக ஆசிரியர் காட்டியவாறு; "மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்" (11) என்ற பதிகத்தினை ஆசிரியர் பொருள் விரித்தவாறு.
"காருலாவிய" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
"ஆரணீய விடங்க"ராம் அருந்தமிழ் - ஆரணீய விடங்கரே என்று பாட்டுத்தோறும் முடிபுகொண்டு இறைவரை விளித்து வினவிய தமிழ்ப் பதிகம்; ஆம் - முடிபுகொண்ட; ஆரணீயம் - வனத்தின் வரும்; வனத்தைப் பற்றிய; ஆரண்யம் - காடு; விடங்கர் - உளி படாத திருமேனியுடையவர்; ஒருவரால் ஆக்கப்படாது தாமாகச் சமைந்த இயற்கைத் திருவடிவம்; மேலே வேறு அணிந்து மறைக்கப்படாத நக்க வடிவம் என்பதும் குறிப்பு.
வண்டறை - என்பதும் பாடம்.