பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச் சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக் கரவிலன் பர்கடங் கூட்டமுந் தொழுது கலந்தினி திருந்துபோந் தருளி விரவிய வீங்கோய் மலைமுத லாக விமலர்தம் பதிபல வணங்கிக் குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக் கொடுமுடி யணைந்தனர் கொங்கில். | 85 | (இ-ள்.) பரவி...பெற்று - (முன் கூறியவாறு) துதித்துத் திருப்பதிகத்தினைத் திருக்கடைக்காப்புச் சாத்தித் திருமுன்பு வணங்கி அருள்விடை பெற்று; கரவில்...இருந்து - கரவு இல்லாத அன்பர் கூட்டத்தினைத்தொழுது அவர்களுடன் கலந்து இனிதாக அமர்ந்து இருந்தருளி; போந்தருளி - மேலே சென்றருளி; விரவிய..வணங்கி - பொருந்திய திருலீங்கோய்மலை முதலாக இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கிக்கொண்டு போந்து; குரவலர்...கொங்கில் -கொங்கு நாட்டினில் குராமலர்கள் அரும்புதற் கிடமாகிய சோலைகள் அணி செய்யும் திருப்பாண்டிக் கொடுமுடியினை அணைந்தருளினர். (வி-ரை.) திருக்கடைக்காப்புச் சாத்தி - பதிகக் கருத்தை விளக்குதலால் திருக்கடைக்காப்பினை விதந்தெடுத் தோதினார். கரவில் அன்பர் - நெஞ்சிற் கள்ளங் கபடு இல்லாத அன்பர்கள்; "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை" (தேவா); கரவு - மனத்திற் கொள்ளும் கபடம்; கள்ளம். இவ்வன்பர்கள் திருப்பாச்சிலாச்சிராமத்தில் நம்பிகளால் முகநோக்கிப் பாடப்பெற்றாராய் உடன் வந்தவர்கள் போலும். அன்பர்தங் கூட்டமும் தொழுது கலந் தினிதிருந்து - அன்பர்களைத் தொழுதலும் அவருடனிருத்தலும் சீவன்முத்தராகிய அணைந்தோர் தன்மையதாம். விரவிய - இடையிற் பொருந்திய; கொங்கிற் புகுமுன் வழியிடை விரவிய. குரவலர் சோலை அணி...கொடுமுடி - குரவு - "குராமலர்" (தேவா); "குறியதன் கீழாக் குறுகலும் அதனோ, டுகர மேற்றலும்" என்பதிலக்கணம். குரா என்றது குரவு என நின்றது. ஈங்கோய்மலை - நம்பிகள் பதிகம் கிடைத்திலது! விமலர்தம் பதிபல - இவை காவிரிக் கரையில் திருப்பைஞ்ஞீலியினை அடுத்துக் கரை அளவில் உள்ளவை. இவ்வாறுள்ள பழைய கோயில்கள் பல இன்றும் காவிரிக்கரையில் காணப்படுவன. |
|
|