பாடல் எண் :3240

கொங்கினிற் பொன்னித் தென்கரை கறையூர்க்
கொடுமுடிக் கோயின்முன் குறுகிச்
சங்கவெண் குழைய ருழைவலஞ் செய்து
சாரந்தடி யன்பினிற் றாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது,
புனிதர்பொன் மேனியை நோக்கி
"இங்கிவர் தம்மை மறக்கவொண் ணா"தென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப,
86
(இ-ள்.) கொங்கினில்....குறுகி - கொங்குநாட்டிலே காவிரியின் தென்கரையில் உள்ள கறையூர்ப் பாண்டிக்கொடுமுடித் திருக்கோயிலின் முன்னே சேர்ந்து; சங்கவெண்...தொழுது - சங்கினா லியன்ற குழையினை அணிந்த இறைவரைத் திருக்கோயிலினைச் சூழ்ந்து வலஞ்செய்து சார்ந்து திருவடிகளில் அன்பினாலே வணங்கி மேன்மேலும் பொங்கிய ஆசை மேலும் பெருகத் தொழுது; புனிதர் பொன்மேனியை நோக்கி - இறைவரது பொன்னார்ந்த திருமேனியைநோக்கி; இங்கிவர்....எடுப்ப - "இங்குள்ள இவரை மறக்கவொண்ணாது" என்று திருவுள்ளத்தில் எழுந்த மெய்க் குறிப்பினாலே தொடங்க,
(வி-ரை.) கொங்கு - கொங்கு நாடு. முன் பாட்டினும் "கொங்கில்" (3239) என்றார்; இதுவரை காவிரி வடகரையிலும் இரு கரைகளிலுமாகச் சோழநாட்டில் யாத்திரை செய்தருளிய நம்பிகள், இங்குக் காவிரி - வடகரை தாண்டி வடகரைப் பதிகளில் (63-வதாக) இறுதிக்கண்ணின்ற திருவீங்கோய் மலையினை வணங்கிச் சோணாடு நீங்கிக் கொங்கு நாடாகிய வேற்று நாட்டுக்குள் யாத்திரை சென்றருளும் நிலை குறித்தற்கு.
கறையூர்க் கொடுமுடிக் கோயில் - "கறையூரிற் பாண்டிக் கொடுமுடி" என்பது பதிகம். ஒரு பாண்டியனது கறைநோய் தீர்த்த காரணத்தால் இப்பெயர் பெற்றதென்பது தலவரலாறுகளுள் ஒன்று. கொடுமுடி - இறைவர் பெயர். மேருவின் பெருஞ் சிகரங்களுள் ஒன்றென்பது வரலாறு; அதனை இடமாகக் கொண்டு இறைவர் விளங்க வீற்றிருத்தலின் கொடுமுடிநாதர் என்றே பெயர் வழங்குவர். கொடுமுடியின் கோயில் என்க. (2236 பார்க்க.) குழையர் உழை - குழையாருடைய கோயிலின் பக்கத்துச் சுற்றி வலமாக.
பொங்கிய வேட்கை பெருகிட - முன்னமே உள்ளடங்காமல் மேலெழுந்து பொங்கிய பெருவிருப்பம் மேலும் பெருக.
பொன்மேனி - பொன்னார்ந்த அழகுடைய திருமேனி. "பொன்னார் மேனியனே" (தேவா). அடியிணையினில் - என்பதும் பாடம்.
இங்கிவர்....எடுப்ப - இங்கு இறைவரது திருமேனிப் பொலிவினில் ஈடுண்டு உள்ளூர அழுந்திவிட்டமையால் இனி இவரை எப்போதும் மறக்கவொண்ணாது என்று திருவுளத்தில் மெய்க்குறிப்பு நிகழ, அதனாலே அக்கருத்துத் தோன்ற; மெய்க்குறிப்பு - உண்மை; சத்தாகிய குறிப்பு. மெய் - திருமேனி என்றலுமாம்.