"அண்ணலா ரடிகண் மறக்கினு நாம வஞ்செழுத் தறியவெப் பொழுதும் எண்ணிய நாவே யின்சுவை பெருக விடையறா தியம்பு"மென் றிதனைத் திண்ணிய வுணர்விற் கொள்பவர் "மற்றுப் பற்றிலே" னெனச்செழுந் தமிழால் நண்ணிய வன்பிற் பிணிப்புற நவின்றார் நமச்சிவா யத்திருப் பதிகம். | 87 | (இ-ள்.) அண்ணலார்...கொள்பவர் - "அண்ணலாரது திருவடிகளை நான் மறப்பினும் அவரது திருநாமமாகிய திருவைந்தெழுத்தினை எண்ணிய நாவே இனிய சுவை பெருக இடையறாமற் சொல்லும்" என்ற இக்குறிப்பினைத் தமது உறைப்புடைய உணர்வினாலே கொள்பவராகி; மற்றுப் பற்றிலேன்....நமச்சிவாயத் திருப்பதிகம் - "மற்றுப் பற்றெனக் கின்றி" என்று தொடங்கிச் செழுமையாகிய தமிழினாலே பொருந்திய அன்பினாலே கட்டுப்பாடு பெறும்படி நமச்சிவாயத் திருப்பதிகத்தினைச் சொல்லியருளினர். (வி-ரை.) அண்ணலார்...இயம்பும் என்று - இது பதிகக் குறிப்பு; "நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சி வாயவே" என்ற தேவாரத்தின் பொருள் விரித்தவாறு. நாம அஞ்செழுத்து - இறைவரது திருநாமமாகிய திருவைந்தெழுத்து; "ஐந்தெழுத்தின் நாமத்தான்காண்" (தேவா). "அறிய எப்பொழுதும் எண்ணிய நாவே - இயம்பும்" - அறிய - மனம் அறிந்துகொள்வதனால். எப்பொழுதும் எண்ணிய நா - இடைவிடாது நாவானது திருவைந்தெழுத்தைத் தழும்பேறச் சொல்லிக்கொண்டிருக்கும்; ஈண்டு எண்ணுதல் என்ற மனத்தின் செய்கை அதனால் இடைவிடாது தூண்டப்பட்டுத் தானே சொல்லிப் பழகுதல் என்ற பொருளில் வந்தது; உட்கரணமாகிய மனமும் அதனாற் றூண்டப்பட்டபுறக்கருவியாகிய நாவும் ஒருதன்மைப்பட்டுப் பழகியதனால் மனத்தின் செயல் நாவின் செயலேயாயிற்று; எண்ணுதல் - அளவறிந்து சொல்லுதல் என்ற குறிப்புடனும் நின்றது; நாவே - மனம் மறக்கினும் நா தானே என ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம். இன்சுவை பெருக - நாவின் றொழிலாகக் கூறியதற்கேற்பச் சுவை என்றார். இரண்டும் பிணைந்து இயன்றமையால் மனத்தின் றொழிலாகிய எண்ணுதல் நாவிற்கும், நாவின் றொழிலாகிய சுவை மனத்துக்கும் ஏற்றப்பட்டன. "ஆலைப்படுகரும் பின் சாறுபோல அண்ணிக்கும் ஐந்தெழுத்தின் நாமம்" (தேவா) என்று அரசுகள் இதனை அருளுதல் காண்க. என்றிதனை - என்ற இக்குறிப்பினை; என்ற இதனை என்பது என்றிதனை என நின்றது. திண்ணிய உணர்வு - திட்பமாவது அன்பி னிலையினின்றும் பிறழாத உறைப்பு; உணர்விற் கொள்ளுதல் - மனத்தினுள் ஊன்றி வைத்தல். மற்றுப் பற்றிலேன் - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; என - என்று தொடங்கி. செழுந்தமிழ் - செழுமை - மெய்ப்பொருளாகிய திருவைந்தெழுத்தினை உட்கொண்டு எடுத்துக்கூறும் தன்மை. பிணிப்புறுதல் - பிறழாது ஒன்றுபடச் சேர்த்துக் கட்டப்படுதல்; பிணிப்புற - வினையெச்சம்; இதனை நவின்ற தாம் பிணிக்கப்பெறுதலால் எனக் காரணப்பொருளில் வந்தது; இதனைப் பயிலும் உலகர் அன்பிற் பிணிப்புறும் பொருட்டு என்று உரைக்கும் குறிப்புமுடையது. நமச்சிவாயத் திருப்பதிகம் - பதிகத்தின் பெயர். உட்கொண்ட பொருளினாற் போந்த பெயர். கோளறு பதிகம் - திருநீற்றுப் பதிகம் என்புழிப்போலக் காண்க; பயன் பற்றியும், ஏகபாதம், மொழிமாற்று முதலியவை யாப்பமைதி பற்றியும், இவ்வாறு பிற அமைதிகள் பற்றியும் பதிகப் பெயர்கள் வருதல் காண்க. முன் பாட்டில் "இங்கிவர் தம்மை மறக்க வொண்ணாது" என்பது உண்ணின்றெழுந்த அருளின் குறிப்பும். இப்பாட்டில் அதனாற் போந்து உணர்வினுள் ஊன்றிய கருத்தும், பதிக முதற்குறிப்பும், பதிகப் பெயரும் கூறியவாறு கண்டு கொள்க. மேற்பாட்டில் பதிகப் பயன் கூறுதலும் காண்க. திருவைந்தெழுத்துப் பற்றியதனோடு, தலம் பற்றிய பதிகமாயு மிருக்கும் தனிச் சிறப்புடைய திருப்பதிகமாதலின் இத்துணையும் எடுத்துக் காட்டியது ஆசிரியரது தெய்வக் கருணைக் கவிநலமாம். மேலும் இதன் சிறப்பினை வரும் பாட்டிலும் பயன் கூறுமாற்றாற் கூறுதலும் காண்க. |
|
|