அத்திருப் பதியை யணைந்துமுன் றம்மை யாண்டவர் கோயிலிற் புகுந்து மெய்த்தவர் சூழ வலங்கொண்டு முன்பு மேவுவார் தம்மெதிர் விளங்க நித்தனார் தில்லை மன்றுணின் றாட் னீடிய கோலநேர் காட்டக் கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக் கலுழிநீர் பொழிதரக் கண்டார். | 89 | (இ-ள்.) அத்திருப்பதியை...வலங்கொண்டு - அந்தத் திருப்பதியாகிய திருப்பேரூரினை அணைந்து, முன்னால் தம்மை ஆண்டருளிய இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்து, மெய்த்தவர்களாகிய அடியார்கள் புடைசூழ வலமாக வந்து; முன்பு மேவுவார் - திருமுன்பு சென்று சேர்வாராகிய நம்பிகள்; தம்மெதிர்....காட்ட - தம்மெதிரே இறைவனார் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற நீடிய திருக்கோலத்தினையே நேராக இங்குக் காட்டியருள; கைத்தலம்...கண்டார் - இரண்டு கைகளையும் சிரமேற் கூப்பிக் கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் ஆறுபோலப் பெருகிவரக் கண்டருளினர். (வி-ரை.) முன் தம்மை ஆண்டவர் - திருவெண்ணெய் நல்லூரிலும், அதன் முன் திருக்கயிலையிலும் தம்மை ஆளாகக்கொண்ட இறைவனார். மெய்த்தவர் - உண்மை யடியார்கள். நம்பிகளுடனே சூழ்ந்து திருக்கோயிலில் இறைவரை வணங்கப் பேறு பெற்றது மெய்த் தவப் பயனாம் என்பது. திருக்கோயில் வழிபாடு அடியார்களுடன் கூடிச் செய்யத் தக்கது என்ற குறிப்புமாம். நித்தனார்...கோலம் - விளங்கக் - காட்ட - தில்லை திருநடனத்தின் காட்சியே இங்குக் காணும்படி விளக்கமாகக் காட்டியருள; திருவீழிமிழலையில் திருப்புகலிக் காட்சியும், திருமருகலிற் றிருச்செங்காட்டங்குடிக் காட்சியும் ஆளுடைய பிள்ளையாருக்கு இறைவர் அருளிய நிலைகள் இங்கு நினைவுகூர்தற்பாலன; ஒரு பதியிற் கும்பிட்டு வழிபட்டால் அப்பதியின் இறைவரது திருவடையாளங்கள் முதலிய திருமேனியின் கோலங்கள் முழுதும் மனத்துட் பதியும்படி கண்டு வைத்து வழிபட வேண்டுமென்ற நிலையுங் காட்டப்பட்டது. நேர் காட்டக் - கண்டார் - காட்டக் காண்பது உயிரியல்பு. இந்நினைவின் உறைப்புப் பற்றியே, பின்னர்த் தில்லையில், இக்காட்சியே கண்டு பேரூரிற்கண்ட நிலை சிறப்பித்துப் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம்" (தேவா) என்றருளிச் செய்கின்றார். ஆனந்தக் கலுழிநீர் - ஆனந்த வெள்ளமாகி அருவிபோலப் பாய்ந்தொழுகும் கண்ணீர்; கலுழி - காட்டாறு; நீர்ப் பெருக்கு; பெரு வெள்ளம் என்றலுமாம். வலங்கொடுதிருமுன் - என்பதும் பாடமாம். |
|
|